சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 41 பேர் கைது
ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 41 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ரெயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்துவதை கைவிட வேண்டும். தனியார் துறையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஈரோடு மாவட்டக்குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் சங்கத்தினர் ஈரோடு பஸ் நிலையம் சத்திரோடு நுழைவு வாயில் பகுதியில் நேற்று காலை திரண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இதைத்தொடர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபடுவதற்காக சத்தி ரோட்டை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியிலேயே போராட்டக்குழுவினர் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் ரோட்டில் படுத்துக்கொண்டு கோஷங்களை எழுப்பினார். அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
இதேபோல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து மினிபஸ்சில் ஏற்றினார்கள். இதில் 8 பெண்கள் உள்பட மொத்தம் 41 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.