கஜா புயல் தாக்கி 75 நாட்கள் ஆகியும் நிவாரணம் வழங்காததால், 75 அடி உயர கோபுரத்தில் ஏறி மீனவர்கள் போராட்டம்


கஜா புயல் தாக்கி 75 நாட்கள் ஆகியும் நிவாரணம் வழங்காததால், 75 அடி உயர கோபுரத்தில் ஏறி மீனவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2019 4:30 AM IST (Updated: 29 Jan 2019 11:08 PM IST)
t-max-icont-min-icon

கஜா புயல் தாக்கி 75 நாட்கள் ஆகியும் நிவாரணம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக வழங்கக்கோரியும் வேதாரண்யம் அருகே 75 அடி உயர கோபுரத்தில் ஏறி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வேதாரண்யம்,

கடந்த நவம்பர் மாதம் 15–ந் தேதி கஜா புயல் தாக்கியதில் நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா முழுவதும் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இந்த பகுதியில் இருந்த கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் மற்றும் வருவாய் தரக்கூடிய மரங்கள் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் கடுமையான சேதம் அடைந்தன.

கடற்கரை கிராமங்களான ஆறுகாட்டுதுறை மீனவ கிராமத்தில் பைபர் மற்றும் விசைப்படகுகள் கடுமையாக சேதம் அடைந்தது. சேதம் அடைந்த படகுகளுக்கு தமிழக அரசு நிவாரணத்தொகை அறிவித்து இருந்தது. புயல் தாக்கி 75 நாட்கள் ஆகிய நிலையில் இதுவரை மீனவர்களுக்கு நிவாரண தொகை வழங்கவில்லை.


இதனால் ஆத்திரம் அடைந்த மீனவர்கள் 10 பேர், ஆறுகாட்டுதுறை கடற்கரையில் உள்ள காற்றை அளவிடும் கருவி அமைக்கப்பட்டுள்ள சுமார் 75 அடி உயரம் உடைய கோபுரத்தில் ஏறி உடனடியாக நிவாரணம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர்.

தகவல் அறிந்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேலு, சப்–இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வரவழைக்கப்பட்டனர். அங்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியும் மீனவர்கள் கோபுரத்தில் இருந்து இறங்கி வர மறுத்து விட்டனர்.


மீன்வளத்துறை அதிகாரிகள் வந்து நிவாரணம் எப்போது வழங்கப்படும் என உறுதியளித்தால்தான் நாங்கள் கீழே இறங்குவோம் என கூறி தொடர்ந்து கோபுரத்தின் மேலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் மீன்வளத்துறை அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை.

இந்த நிலையில் வேதாரண்யம் தாசில்தார் இளங்கோவன், இன்ஸ்பெக்டர் முருகவேலு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறினார்கள். அதன் பிறகே போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் 1½ மணி நேரத்துக்கு பிறகு தங்களது போராட்டத்தை கைவிட்டு கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தனர்.


மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கோபுரத்தில் இருந்து இறங்கி வந்த பின்னரே போலீசார் நிம்மதி அடைந்தனர். கஜா புயல் நிவாரணம் வழங்கக்கோரி 75 அடி உயர கோபுரத்தில் ஏறி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story