ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் தம்பிதுரை பேட்டி


ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் தம்பிதுரை பேட்டி
x
தினத்தந்தி 30 Jan 2019 4:30 AM IST (Updated: 30 Jan 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

கரூர்,

கரூர் மாவட்டம், கடவூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரவணை, மஞ்சநாயக்கன்பட்டி, கம்மநல்லூர், திருக்காம்புலியூர், சேங்கல், சித்தலவாய், பாலாராஜபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் சாலை மேம்பாடு செய்தல், பேவர் பிளாக் சாலைகள் அமைத்தல் மற்றும் தடுப்பணை கட்டுதல், புதிய அம்மா பூங்காவினை திறந்து வைத்தல் என மொத்தம் ரூ.1 கோடியே 78 லட்சம் மதிப்பிலான பல்வேறு புதிய பணிகளை பூமிபூஜையிட்டு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்து கொண்டு, மேற்கண்ட பணிகளை தொடங்கி வைத்தும், முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார். அந்த வகையில் கடவூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் ரூ.1 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, முடிவுற்ற பணிகள் திறந்துவைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக உறுதி திட்ட பணியாளர்களிடம் தேவைகள் என்னவென்று கேட்டறியப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, மனோகரன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே கம்மநல்லூரில் தார்ச்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறுகையில், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள், மக்களின் மனுக்கள் குறித்து பரிசீலனை செய்வது எங்களது கடமை. ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும். எனவே ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனே பள்ளிகளுக்கு திரும்ப வேண்டும். என்றார். தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களிடம் துணை சபாநாயகர் குறைகளை கேட்டறிந்தார். 

Next Story