கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது


கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 31 Jan 2019 4:30 AM IST (Updated: 30 Jan 2019 10:37 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை, 

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பவர்களை கைது செய்ய போதைபொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாரும், மாநகர போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவர்மன் மற்றும் போலீசார் சிங்காநல்லூர் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் திருப்பூர் ராமையா காலனியை சேர்ந்த அழகர்சாமி (வயது 49) என்பது தெரியவந்தது.

இவர் திண்டுக்கல்லில் இருந்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்து கோவை பீளமேடு, சரவணம்பட்டி, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிந்தது. இதைதொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது ரெயில் நிலையத்தில் பார்சல் அலுவலக பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்தனர். அவரிடம் இருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் ½ கிலோ கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் பகுதியை சேர்ந்த சித்திக் (வயது 48) என்பதும், கேரளாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story