தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது - 30 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு
செஞ்சி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டது.
செஞ்சி,
செஞ்சி பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போவதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதையடுத்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராஜ் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சபரிமலை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் செஞ்சி அருகே பாக்கம் கிராமத்தை சேர்ந்த பாலு மகன் பாரி என்கிற பாரிவள்ளல் (வயது 25), செம்மேடு கிராமத்தை சேர்ந்த நவீன்குமாருடன் சேர்ந்து செஞ்சி, வளத்தி, சத்தியமங்கலம், அவலூர்பேட்டை உள்ளிட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து பாரியை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைமறைவான நவீன்குமாரை போலீசார் தேடிவருகின்றனர்.
இதற்கிடையே இதுபற்றி அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், செஞ்சிக்கு வந்து மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை பார்வையிட்டு, திருட்டில் ஈடுபட்ட பாரியை கைது செய்த தனிப்படை போலீசாரை பாராட்டி பரிசு வழங்கினார்.
Related Tags :
Next Story