புழல் அருகே டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
புழல் அருகே டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த புழல் லட்சுமிபுரம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் பூபதி. இவருடைய மகன் கிஷோர் (வயது 24). இவர், மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மாலை கல்லூரி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்தார். வில்லிவாக்கம்–கடப்பா சாலை வளைவில் அவரது வீட்டின் அருகே வந்தபோது அதே திசையில் வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த கிஷோர் மீது டிப்பர் லாரி ஏறி இறங்கியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கிய கிஷோர், சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்த உடன் டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் பலியான கிஷோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிப்பர் லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.