தமிழகத்தில் முதல் முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில் ‘ரோபோட்டிக்’ ஆய்வகம்
தமிழகத்தில் முதல் முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில் ‘ரோபோட்டிக்‘ ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை மாநகராட்சியும், அமெரிக்கன் இந்தியா நிறுவனமும் இணைந்து தத்தனேரி மாநகராட்சி திரு.வி.க.மேல்நிலைப்பள்ளியில் ‘ரோபோட்டிக்‘ ஆய்வகத்தை ரூ.13 லட்சம் செலவில் அமைத்துள்ளது. இந்த ஆய்வகத்தில் 10 ரோபோக்கள், 10 மடிக்கணினிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
அதில் 6–ம் வகுப்பு முதல் 9–ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரோபோ மூலம் பயிற்சிகள் வழங்கப்படும். இதற்காக ‘ரோபோட்டிக்‘ அனுபவம் உள்ள ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வகத்தில் ஒவ்வொரு ரோபோ எந்திரமும், தனித்தனி மடிக்கணியில் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த மடிக்கணியில் மாணவர்கள் வழங்கும் உத்தரவை ஏற்று ரோபோ எந்திரங்கள் செயல்படும்.
இந்த ‘ரோபோட்டிக்‘ திறப்பு விழா நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் தற்போதைய தொழில்நுட்ப காலத்திற்கேற்ப நவீன தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளும் வகையில் ‘ரோபோட்டிக்‘ ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முதல் முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில் தான் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஈ.வெ.ரா பள்ளி மாணவர்கள் தவிர மற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த பள்ளியில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் படிப்படியாக அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் ‘ரோபோட்டிக்‘ ஆய்வகம் ஏற்படுத்தப்படும். ரோபோ மூலம் படிப்பதால் மாணவர்களுக்கு ஆர்வமும், மகிழ்ச்சியும், ஈடுபாடும் ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் ரோபோ எந்திரங்களை வைத்து பயிற்சி பெற்றனர்.