திருச்செந்தூரில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
திருச்செந்தூரில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
பின்னர் அவர், 53 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். வேளாண்மை துறை சார்பில், 75 சதவீத மானியத்தில் ஒரு பயனாளிக்கு தெளிப்பு நீர் தூவுவான் எந்திரம் வழங்கப்பட்டது.
பின்னர் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா வருகிற 10-ந் தேதி தொடங்கி, 12 நாட்கள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும். கோவிலில் கிரிப்பிரகார மண்டபம் புதிதாக கட்டப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை உடனே நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. உடன்குடியில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணியும், கல்லாமொழி கடலில் நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. ஆலந்தலையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
திருச்செந்தூரில் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு பெற்றவர்கள் தங்களது வீடு, கடை, விடுதி, மண்டபம் போன்றவற்றில் உள்ள கழிவுநீர் குழாய் இணைப்புகளில் குப்பைகளை கொட்டுவதால், கழிவுநீர் வெளியேறாமல் தடைபடுகிறது. எனவே பாதாள சாக்கடை திட்ட இணைப்பு பெற்ற அனைவரும் தங்களது கழிவுநீர் குழாய் இணைப்பில் குப்பைகள் செல்லாதவாறு, ஒரு வாரத்துக்குள் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும். இல்லையெனில் அந்த இணைப்பு துண்டிக்கப்படும்.
இதனை செயல்படுத்துவதற்கு திருச்செந்தூர் உதவி கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. திருச்செந்தூர் பயணியர் விடுதி சாலையில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் விருந்தினர் மாளிகை கட்டும் பணி நிறைவுபெற உள்ளது. மேலும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்காக ‘யாத்ரி நிவாஸ்‘ கட்டப்பட உள்ளது. கடலோர ஒழுங்குமுறை சட்டத்தின்படி, விதிகளை மீறிய 76 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, தாசில்தார் தில்லைப்பாண்டி, உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மண்டல துணை தாசில்தார் கோபால், வருவாய் ஆய்வாளர் மாரியம்மாள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story