‘ராகுல்காந்தி, பிரியங்கா என யார் வந்தாலும் மோடியை எதிர்கொள்ள முடியாது’ திருப்பூரில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


‘ராகுல்காந்தி, பிரியங்கா என யார் வந்தாலும் மோடியை எதிர்கொள்ள முடியாது’ திருப்பூரில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 30 Jan 2019 10:30 PM GMT (Updated: 31 Jan 2019 12:16 AM GMT)

ராகுல்காந்தி, பிரியங்கா என யார் வந்தாலும் மோடி என்ற மாமனிதரை எதிர்கொள்ள முடியாது என்று திருப்பூரில் நடைபெற்ற கால்கோள் விழாவில் பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

திருப்பூர்,

பிரதமர் நரேந்திரமோடி வருகிற 10-ந்தேதி திருப்பூர் பெருமாநல்லூர் புதுப்பாளையம் பிரிவு பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட பா.ஜனதா கட்சி செய்து வருகிறது. கூட்டம் நடைபெற உள்ள மைதானத்தில் மேடை அமைப்பதற்கான கால்கோள் நடும் விழா நேற்று நடந்தது. முன்னதாக இதற்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கால்கோள் நடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார்.

மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுசெயலாளர் வானதி சீனிவாசன், அகில இந்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவன் விநாயகம், கோட்ட பொறுப்பாளர் பாயிண்ட் மணி, மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாநில செயலாளர் நந்தகுமார், கோட்ட பொறுப்பாளர் செல்வகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 10-ந்தேதி திருப்பூருக்கு வருகை தர உள்ளார். மதுரையில் மிக பிரமாண்டமான கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம். அதில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மட்டுமின்றி, 3 உயர் கல்விக்கான கட்டிடங்கள், பாஸ்போர்ட் அலுவலகங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது பிரதமர் மோடி திருப்பூருக்கு வருகை தர உள்ளார். இதைத்தொடர்ந்து அமித்ஷா, நிதின்கட்கரி உள்ளிட்ட தலைவர்களும் தமிழகத்திற்கு வருகைதர உள்ளனர். மீண்டும் மோடி பிரதமராவதில் தமிழகத்தின் பங்கு அதிகம் இருக்கும். இதனால் தான் ‘மீண்டும் மோடி, வேண்டும் மோடி’ என்று கூறிவருகிறோம். விளம்பரங்கள் அதிகமாக செய்யப்படுகிறது என பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சில அரசின் திட்டங்களை விளம்பரங்கள் செய்து தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் வீண் செலவுகளை அரசு தவிர்த்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் மட்டும் 10 லட்சம் போலி ரேஷன் கார்டுகள், போலி ஓட்டுனர் உரிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது. தேவையான பயனாளிகளுக்கு மட்டும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மக்கள் பணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் மக்களின் வறுமை ஒழிக்கப்படவில்லை. வறுமையில் மக்களை வைத்திருந்தது தான் சாதனை. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அடிப்படை தேவையான குறிப்பிட்ட தொகையை கொடுப்பதாக ராகுல்காந்தி போலியான உறுதிமொழியை கொடுத்து வருகிறார்.

ரெயில்வே பட்ஜெட் மத்திய பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதால் ரூ.10 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக கூறினார்கள். ஆனால் குறைந்த அளவிலான தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. பொய்வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெறலாம் என்று காங்கிரஸ் நினைத்து கொண்டிருக்கிறது. நாளை(வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்கள் உள்ளன. ராகுல்காந்தி, பிரியங்கா என யார் வந்தாலும் மோடி என்ற மாமனிதரை அரசியலில் எதிர்கொள்ள முடியாது. தமிழகத்திலேயே அவருக்கு பிரமாண்ட ஆதரவு பெருகி கொண்டிருக்கிறது. வடஇந்தியாவில் இதை விட அதிக ஆதரவு உள்ளது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழக்கில் ஆறுமுகசாமி ஆணையத்தில் பிரதமரை விசாரிக்க வேண்டும் என்று ஸ்டாலின் நிலை தடுமாறி வரம்பு மீறி பேசுகிறார். எதை பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் தொடர்ந்து பதற்றத்தில் இருந்து வருகிறார். தி.மு.க.வின் பத்திரிகையில், எய்ம்ஸ்க்கு இன்னும் நிதி ஒதுக்கவில்லை என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் ரூ.1,300 கோடி ஒதுக்கி அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, 48 மாதத்தில் இந்த மருத்துவமனை செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் மக்கள் பா.ஜனதா கட்சியுடன் சென்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில் பேசி கொண்டிருக்கிறார்கள்.

திருப்பூருக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி, ஏழைகளுக்கு வீடு உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜாக்டோ-ஜியோ போராட்டம் எதிர்க்கட்சியினால் தூண்டிவிடப்பட்டது. மற்ற அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வேறுபாடு உள்ளது. எதிர்க்கட்சிகள் தூண்டுதலுக்கு அவர்கள் ஆளாகி விடக்கூடாது. நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். எதிர்க்கட்சிகளின் கூட்டணியினர் பிரதமர் வேட்பாளரை கூட உறுதியாக சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள். பா.ஜனதா கட்சியின் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story