கன்னியாகுமரியில் விதிகளை மீறி கட்டப்பட்ட 6 விடுதிகளுக்கு ‘சீல்’ வைப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை


கன்னியாகுமரியில் விதிகளை மீறி கட்டப்பட்ட 6 விடுதிகளுக்கு ‘சீல்’ வைப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 1 Feb 2019 4:30 AM IST (Updated: 31 Jan 2019 10:37 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் விதிகளை மீறி கட்டப்பட்டு வரும் 6 விடுதிகளுக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருவதால், இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக 106 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 15–க்கும் மேற்பட்ட விடுதிகள் நட்சத்திர அந்தஸ்து கொண்டதாக உள்ளது.

இந்த நிலையில் கன்னியாகுமரியில் கடலோர மேலாண்மை ஒழுங்கு முறை சட்டத்தை மீறியும், அனுமதி பெறாமலும் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட விடுதிகளுக்கு ‘சீல்‘ வைக்க உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து நெல்லை மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் நாகராஜன் தலைமையில் அதிகாரிகள் நேற்று கன்னியாகுமரிக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகனுடன் இணைந்து சோதனை நடத்தினர். இதில், கன்னியாகுமரி சர்ச்ரோடு சந்திப்பில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 9 மாடி, 7 மாடி உடைய 2 விடுதிகளுக்கு ‘சீல்’ வைத்தனர்.

அதே போல் ரதவீதியில் உள்ள 4 விடுதிகளுக்கும் ‘சீல்‘ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்த பணியின் போது கன்னியாகுமரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் நேற்று கன்னியாகுமரியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story