கடனை வசூலிக்க பொதுமக்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வங்கிகள்-நிறுவனங்கள் மீது நடவடிக்கை அமைச்சர் தகவல்


கடனை வசூலிக்க பொதுமக்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வங்கிகள்-நிறுவனங்கள் மீது நடவடிக்கை அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 31 Jan 2019 11:00 PM GMT (Updated: 2019-02-01T00:40:50+05:30)

புயல் பாதித்த பகுதிகளில், கடனை வசூலிக்க பொதுமக்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வங்கிகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கத்தரிப்புலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு 650 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக வெள்ளாடுகளை வழங்கினார். இதில் விடுபட்டவர்களுக்கு விரைவில் பசு மாடுகள் வழங்கப்படும் என அமைச்சர் கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புயல் பாதித்த பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதற்காக 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். வேதாரண்யம் தாலுகாவை குடிசைகள் இல்லாத தாலுகாவாக மாற்ற முயற்சிகள் தொடங்கி உள்ளன. இப்பகுதியில் குடிசைகளில் வசிப்பவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.

ஆடுகள் கிடைக்காத குடும்பங்களுக்கு விரைவில் பசு மாடுகள் வழங்கப்படும். கஜா புயல் மக்களை கடும் பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டது. கஜா புயல் மறு சீரமைப்பு பணி தொடர்ந்து 5 ஆண்டுகள் நடைபெறும். ஆடுகள் வளர்த்தால் குடும்பத்தில் பொருளாதாரம் உயரும். அதன் அடிப்படையில் தான் ஆடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. புயல் பாதித்த பகுதிகளில் கடனை வசூலிப்பதற்காக பொதுமக்களுக்கு நெருக்கடி கொடுக்க கூடாது என வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை மீறி, கடனுக்காக பொதுமக்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வங்கிகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம். புகாரின் பேரில் பொதுமக்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படும்.

வங்கி கணக்கு எண் சரியாக வழங்கப்படாத காரணத்தாலும், தொழில் நுட்ப காரணங்களாலும் 6 ஆயிரம் குடும்பங்களுக்கு புயல் நிவாரண தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படாமல் உள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு நிவாரண தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தேத்தாகுடி கூட்டுறவு சங்க தலைவர் கிரிதரன், கத்தரிப்புலம் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் அபிமன்னன், நாகை கால்நடை துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், கால்நடை மருத்துவர்கள் ராஜா, கலைச்செல்வி, ஊராட்சி செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Next Story