ஆண்களை விட பெண்களே அதிகம்: தஞ்சை மாவட்டத்தில் 19¼ லட்சம் வாக்காளர்கள் இறுதி பட்டியலை வெளியிட்டு கலெக்டர் தகவல்


ஆண்களை விட பெண்களே அதிகம்: தஞ்சை மாவட்டத்தில் 19¼ லட்சம் வாக்காளர்கள் இறுதி பட்டியலை வெளியிட்டு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 1 Feb 2019 4:15 AM IST (Updated: 1 Feb 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் 19¼ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர் என்று இறுதி பட்டியிலை வெளியிட்ட கலெக்டர் கூறினார்.

தஞ்சாவூர்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்படி, தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டன.

இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின்னர் கலெக்டர் அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 19 லட்சத்து 35 ஆயிரத்து 47 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 49 ஆயிரத்து 295 பேரும், பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 85 ஆயிரத்து 634 பேரும் இதர பாலினத்தவர்கள் 118 ஆவர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 36 ஆயிரத்து 339 பேர் அதிகம்.

1-1-2019-ஐ தகுதி நாளாக கொண்டு புதிதாக 43 ஆயிரத்து 569 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகளின் போது இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் என 20 ஆயிரத்து 844 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவிடைமருதூர் சட்டசபை தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,40,794. ஆண்கள் 1,20,701. பெண்கள் 1,20,079. இதர பாலினத்தவர் 14. கும்பகோணம் சட்டசபை தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,54,934. ஆண்கள் 1,25,377. பெண்கள் 1,29,554. இதரபாலினத்தவர் 3. பாபநாசம் சட்ட சபை தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,44,054. ஆண்கள் 1,20,539. பெண்கள் 1,23,505. இதர பாலினத்தவர் 10. திருவையாறு சட்டசபை தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,53,708. ஆண்கள் 1,24,713. பெண்கள் 1,28,991. இதர பாலினத்தவர் 4.

தஞ்சை சட்டசபை தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,71,799. ஆண்கள் 1,30,852. பெண்கள் 1,40,892. இதரபாலினத்தவர் 55. ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,28,884. ஆண்கள் 1,12,244. பெண்கள் 1,16,635. இதர பாலினத்தவர் 5. பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,31,489. ஆண்கள் 1,11,419. பெண்கள் 1,20,049. இதரபாலினத்தவர் 21. பேராவூரணி சட்டசபை தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,09,385. ஆண்கள் 1,03,450. பெண்கள் 1,05,929. இதர பாலினத்தவர் 6.

இறுதி வாக்காளர் பட்டியல் தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களின் பார்வைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வைக்கப்படுகிறது. வாக்காளர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் விடுபாடின்றி, தவறு ஏதுமின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள தவறியவர்கள் இன்று முதல் புதிதாக பெயர் சேர்க்க படிவம் எண்-6, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் படிவம் எண்-6 ஏ மூலமும், பெயர் நீக்கம் செய்திட படிவம் எண்-7, பெயர், முகவரி மற்றும் புகைப்படம் திருத்தம் இவற்றில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொண்டிட படிவம் எண்-8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் எண் -8 ஏ பூர்த்தி செய்து உரிய சான்றாவணங்களுடன் தொடர்புடைய தாசில்தார் அலுவலகங்களில் உள்ள தேர்தல் பிரிவில் அளிக்கலாம். நேரடியாக உரிய படிவத்தில் பூர்த்தி செய்து வழங்க இயலாத பொது மக்கள் ஆன்லைன் மூலமாக www.nvsp.com, www.elections.tn.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வாக்காளர் தொடர்பு மையம் செயல்பட்டு வருகிறது. வாக்காளர்கள் தங்களுக்கு தேவையான விவரங்களை அறிந்து கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-ல் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். மேலும், வாக்காளர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு செல்போனில் vot-ers he-l-p-i-ne என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் இலவச செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு அதன் மூலமாக வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள விவரத்தை தெரிந்து கொள்ளலாம். இந்த செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் மேற்கொள்ளவும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

இதில் வக்கீல் சரவணன் (அ.தி.மு.க.), நீலகண்டன், புண்ணியமூர்த்தி (தி.மு.க.), இளங்கோ, விநாயகம் (பா.ஜ.க.), பழனியப்பன், மோகன்ராஜ் (காங்கிரஸ்), முகமதுஅலி (தே.மு.தி.க.), கரிகால்சோழன் (தேசியவாத காங்கிரஸ்), குருசாமி (இந்திய கம்யூனிஸ்டு) மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமினாட்சி, தேர்தல் தாசில்தார் ராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story