வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு கோர்ட்டு உத்தரவின் பேரில் நடவடிக்கை


வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு கோர்ட்டு உத்தரவின் பேரில் நடவடிக்கை
x
தினத்தந்தி 1 Feb 2019 4:30 AM IST (Updated: 1 Feb 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்பிலான நிலத்தை கோர்ட்டு உத்தரவின் பேரில் அதிகாரிகள் மீட்டனர்.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள திருவேதிக்குடியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.40 லட்சம் மதிப்பிலான நஞ்சை நிலம் தனியாரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இந்த நிலத்துக்கான குத்தகை பணமும் கோவிலுக்கு செலுத்தப்படவில்லை. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தஞ்சாவூர் வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த வருவாய் நீதிமன்ற நீதிபதி, சாகுபடியாளர் குத்தகை தொகை செலுத்த தவறியதால் சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்க உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து வருவாய்நீதிமன்ற செயலாக்க வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், நிலஅளவையர் மற்றும் போலீசார் முன்னிலையில் நஞ்சை நிலம் மீட்கப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் நிலத்தில் அடையாளத்துக்காக கொடி நட்டப்பட்டது. அப்போது இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சிவராம்குமார், செயல் அலுவலர்் பழனிவேல், ஆய்வாளர்கள் குணசுந்தரி, கந்தசாமி, திங்களூர் சந்திரன் கோவில் மேலாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story