ஈரோடு மாவட்டத்தில் 18 லட்சத்து 62 ஆயிரத்து 780 வாக்காளர்கள் பட்டியலை மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா வெளியிட்டார்


ஈரோடு மாவட்டத்தில் 18 லட்சத்து 62 ஆயிரத்து 780 வாக்காளர்கள் பட்டியலை மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா வெளியிட்டார்
x
தினத்தந்தி 1 Feb 2019 4:30 AM IST (Updated: 1 Feb 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 18 லட்சத்து 62 ஆயிரத்து 780 வாக்காளர்கள் கொண்ட பட்டியலை மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா வெளியிட்டார்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளுக்கான வாக்காளர்கள் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா தலைமை தாங்கி 8 தொகுதிகளுக்கான வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியலை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ் பெற்றுக்கொண்டார். இதுபோல் அரசியல் கட்சியினரும் பட்டியலை பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் ஈரோடு ஆர்.டி.ஓ. (பொறுப்பு) வி.இளங்கோ, தாசில்தார் பாலசுப்பிரமணியம், தேர்தல் பிரிவு தாசில்தார் ரவிச்சந்திரன், மாநகராட்சி தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பட்டியலை வெளியிட்டு மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 18 லட்சத்து 62 ஆயிரத்து 780 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 9 லட்சத்து 13 ஆயிரத்து 380 பேரும், பெண்கள் 9 லட்சத்து 49 ஆயிரத்து 529 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 73 பேரும் உள்ளனர். 1-1-2019 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை கொண்ட திருத்தம் செய்யப்பட்ட பட்டியலாக இது உள்ளது. கடந்த 1-9-2018 முதல் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் சேர்த்தல் மற்றும் நீக்குதல் பணிகள் நடந்தன. அதன்படி 37 ஆயிரத்து 73 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். மரணம் அடைந்தவர்கள், முகவரி மாற்றம் செய்தவர்கள் என்று 16 ஆயிரத்து 681 பேருடைய பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளன.

தற்போது வெளியிடப்பட்டு உள்ள இந்த பட்டியல் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப்பட உள்ளன. பொதுமக்கள் பட்டியலை பார்வையிட்டு சரிபார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திருத்தம் இருந்தால் உடனடியாக தெரிவிக்கலாம். மேலும், தேர்தல் ஆணையம் 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளது. இது இலவச எஸ்.எம்.எஸ். சேவையாக இருந்தது. இப்போது பொதுமக்கள் பேசும் வசதி உள்ளது. இந்த எண்ணில் பொதுமக்கள் வாக்காளர்கள் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டை, பெயர் நீக்கம், திருத்தம், வாக்குச்சாவடிகளில் தேவையான வசதிகள் மற்றும் ஆலோசனைகளை கூறலாம். தேர்தல் அறிவித்த பின்னர் 24 மணி நேரமும் செயல்படும் இந்த எண் அதுவரை காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை மட்டும் செயல்படும்.

புதிய வாக்காளர் அட்டை பெற விரும்புபவர்கள் படிவம் 001 நிரப்பி தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கையொப்பம் பெற்று சேவை மையங்களில் ரூ.25 செலுத்தி புதிய அட்டைகள் பெற்றுக்கொள்ளலாம்.

ஈரோடு மாவட்டத்தில் தற்போது 92 புதிய வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றையும் சேர்த்து மொத்தம் 2 ஆயிரத்து 213 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. தேர்தல் நடத்துவதற்கு ஆயத்த பணிகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 5 ஆயிரத்து 217-ம் கட்டுப்பாட்டு கருவிகள் 2 ஆயிரத்து 875-ம் தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா கூறினார்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மேற்கு தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 689 ஆயிரத்து 288 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 957 பேர் பெண்கள். குறைந்த பட்சமாக அந்தியூர் தொகுதியில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 594 வாக்காளர்கள் உள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
1 More update

Next Story