மத்திய பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அறிவிப்பு ராமேசுவரம் பகுதி மீனவர்கள் வரவேற்பு
மத்திய அரசின் பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அறிவிப்புக்கு ராமேசுவரம் பகுதி மீனவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரம்,
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுஉள்ளது. இதனால் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மீனவ மக்கள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். இதுகுறித்து நிரபராதி மீனவர்கள் விடுதலை கூட்டமைப்பு தலைவர் யு.அருளானந்தம், மீனவர் சங்க தலைவர்கள் தேவதாஸ், சேசு, எமரிட் ஆகியோர் கூறும்போது, மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அறிவித்தது வரவேற்கத்தக்கது.
ஆண்டுக்கு ரூ.39 ஆயிரம் கோடி அன்னிய செலாவணியை ஈட்டுத்தரக்கூடிய இந்த மீன்பிடி தொழிலை பாதுகாக்க தனி அமைச்சகம் அமைக்கவிருப்பது மகிழ்ச்சிஅளிக்கிறது.
இதனை அறிவிப்போடு நிறுத்தி விடாமல் செயல்படுத்த வேண்டும். மேலும் இதன் மூலம் மீனவர்களுக்கு வேண்டிய வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தொல்லையில்லாமல் மீன்பிடிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.