மதுரை கோட்ட ரெயில்வேயில் 63 வயதானவருக்கு மீண்டும் வேலை வாய்ப்பு என்ஜின் டிரைவர்கள் சங்கம் எதிர்ப்பு
மதுரை கோட்ட ரெயில்வேயில் ஓய்வுபெற்ற 63 வயதுடைய ரெயில் என்ஜின் டிரைவருக்கு மீண்டும் பணி வழங்கி இருப்பதற்கு ரெயில் என்ஜின் டிரைவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மதுரை,
ரெயில்வேயில் ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணிக்கு அமர்த்தும் திட்டம் கடந்த ஓராண்டுக்கு முன் அறிமுக்கப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்கு ரெயில்வே தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ரெயில்வே துறையில் 14 லட்சத்துக்கும் மேலான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை வேலை வாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மதுரை கோட்ட ரெயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர் பணியிடம், கார்டுகள், ரெயில் என்ஜின் டிரைவர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், என்ஜினீயரிங் பிரிவு, பாதுகாப்புப்பிரிவு உள்ளிட்ட பணியிடங்களில் ஓய்வு பெற்றவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் மதுரை கோட்ட ரெயில்வேயில் 63 வயதுடைய ஓய்வு பெற்ற ரெயில் என்ஜின் டிரைவர் ஒருவர் இந்த திட்டத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இதற்கு அகில இந்திய ரெயில் என்ஜின் டிரைவர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரெயில் என்ஜின் டிரைவர்கள், உதவி டிரைவர்கள் 55 வயதுக்கு மேல் பார்வை திறன் குறைந்து விடும் என்பதால், அவர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ், வாரிசு வேலைக்கு விண்ணப்பித்து பணியில் இருந்து விலகிக்கொள்ளலாம் என்ற நடைமுறை அமலில் உள்ளது.
ஆனால், உதவி டிரைவர்களின் பதவி உயர்வு, இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஓய்வு பெற்றவர்களை பணி நியமனம் செய்வது ஏற்புடையதல்ல என்று ரெயில் என்ஜின் டிரைவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.