பா.ஜனதா யாருடன் கூட்டணி என்பதை பொன்.ராதாகிருஷ்ணன் விளக்க வேண்டும் தம்பிதுரை பேட்டி


பா.ஜனதா யாருடன் கூட்டணி என்பதை பொன்.ராதாகிருஷ்ணன் விளக்க வேண்டும் தம்பிதுரை பேட்டி
x
தினத்தந்தி 3 Feb 2019 4:45 AM IST (Updated: 3 Feb 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா யாருடன் கூட்டணி என்பதை பொன்.ராதாகிருஷ்ணன் விளக்க வேண்டும் என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

குடவாசல்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருப்பாம்புரத்தில் சேஷபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ராகு-கேது பரிகார தலமான இக்கோவிலுக்கு நேற்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள ராகு-கேது சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் சில நல்ல அம்சங்கள் உள்ளன. ஆனால் பல வகைகளில் மக்களின் வாழ்க்கைக்கு எதிரான பட்ஜெட் ஆகும். ஒரு அரசு என்றால், தனது ஆட்சியில் 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். பா.ஜனதா ஆட்சியில் ஏற்கனவே 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

கடைசியாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய தேவையில்லை. மேலும் நடைமுறை பட்ஜெட் தாக்கல் செய்யும்போதுதான் அனைத்து திட்டங்களையும் அறிவித்து தாக்கல் செய்ய வேண்டும்.

சட்டசபை தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த பா.ஜனதா, பல சலுகைகளை அறிவித்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க திட்டமிட்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளது. இந்த இடைக்கால பட்ஜெட் பா.ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை போல் உள்ளது. மாதிரி திட்டங்கள் மட்டுமே இதில் உள்ளன. இதனால் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்க போவதில்லை.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ஜனதா விருப்பம் காட்டுவதாக அமைச்சர் உதயகுமார் கூறி உள்ளார். இதுபற்றி கட்சி தலைமை சரியான முடிவு எடுக்கும். கூட்டணி பற்றி முதல்- அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் நல்ல முடிவு எடுப்பார்கள்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு பேட்டியின்போது, ஒரு கட்சியை நாக பாம்பின் விஷத்துடன் ஒப்பிட்டு பேசி உள்ளார். எங்கள் கட்சியை ஊழல் கட்சி என கூறுகிறார். பா.ஜனதா, எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க உள்ளது என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்.

கருத்துக்கணிப்பில் அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு வரும் என்று சொல்வது வேடிக்கையான ஒன்றாகும். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். எங்கள் கட்சி மத்திய அரசை தீர்மானிக்கும் கட்சியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது குடவாசல் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் உடன் இருந்தார்.

Next Story