பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை எதிரொலி: வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்


பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை எதிரொலி: வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
x
தினத்தந்தி 3 Feb 2019 4:15 AM IST (Updated: 3 Feb 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

போடிபட்டி,

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 1–ந்தேதி முதல் எளிதில் மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் உள்பட 14 விதமான பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஓட்டல்கள் மற்றும் சாலையோர உணவகங்களில் பயன்படுத்தப்படும் தெர்மோகோல் தட்டுகள், பிளாஸ்டிக் இலைகள் மற்றும் இலைக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டு வந்த பிளாஸ்டிக் காகிதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் உணவு பரிமாறுவதற்கும் பார்சல்கள் கட்டுவதற்கும் வாழை இலையே பயன்படுத்தியாகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனால் வாழை இலைக்கான தேவை அதிகரித்துள்ளது. இதன்காரணமாக விவசாயிகள் வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து உடுமலை பகுதி விவசாயிகள் கூறியதாவது:–

உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் பொதுவாக வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டுவதில்லை. உடுமலை அருகே உள்ள வாளவாடி, ஜல்லிபட்டி போன்ற ஒரு சில பகுதிகளிலேயே இலைக்காக வாழை சாகுபடி செய்து வந்தனர். தற்பொழுது பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து வாழை இலைக்கான தேவை அதிகரித்துள்ளது.

பொதுவாக வாழை மரங்கள் வளர்ந்து, வாழைத்தார் அறுவடை செய்ய ஒரு ஆண்டு ஆகும். ஆனால் இலைக்காக வாழை சாகுபடி செய்யும் போது, நடவு செய்த 4–வது மாதத்திலிருந்தே இலைகள் வெட்டத் தொடங்கலாம். அதன்பிறகு ஒருநாள் விட்டு ஒரு நாள் என்று தொடர்ச்சியாக 18 மாதங்கள் வரை இலை வெட்டலாம்.

ஒப்பந்த அடிப்படையில் மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் ஆண்டு முழுவதும் ஒரே விலை கிடைக்கும். இல்லையென்றால் மார்க்கெட் நிலவரத்துக்கு தகுந்தாற்போல் நேரடியாக கொண்டு சென்றும் விற்பனை செய்யலாம்.

மேலும் முகூர்த்த நாட்கள் மற்றும் விசே‌ஷ தினங்களில் வாழை இலைக்கு நல்ல விலை கிடைக்கும். இதன் எதிரொலியாக உடுமலையில் பல பகுதிகளிலும் விவசாயிகள் இலைக்காக வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டத்தொடங்கியுள்ளனர். இதனால் இலை வாழை சாகுபடி சீரான லாபம் தரும் தொழிலாக மாறியுள்ளது.


Next Story