பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே வங்கி கணக்கு தொடங்க 113 தபால் ஊழியர்களுக்கு செல்போன், ‘பயோ மெட்ரிக்’ எந்திரம் அதிகாரி தகவல்


பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே வங்கி கணக்கு தொடங்க 113 தபால் ஊழியர்களுக்கு செல்போன், ‘பயோ மெட்ரிக்’ எந்திரம் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 2 Feb 2019 10:30 PM GMT (Updated: 2 Feb 2019 8:05 PM GMT)

நகர பகுதிகளில் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே வங்கி கணக்கு தொடங்குவதற்காக கடலூர் தபால் கோட்டத்தில் 113 தபால் ஊழியர்களுக்கு செல்போன் மற்றும் ‘பயோமெட்ரிக்’ எந்திரம் நாளை முதல் வழங்கப்படுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடலூர்,

தபால்துறையின் மூலம் போஸ்டல் பேமன்ட் வங்கி சேவையை பிரதமர் நரேந்திரமோடி கடந்த செப்டம்பர் 1–ந் தேதி தொடங்கி வைத்தார். இதில், பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே வங்கி கணக்கை தொடங்கி பணத்தை தங்களது கணக்கில் செலுத்தவும், எடுக்கவும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

இதற்காக தபால் ஊழியர்களுக்கு செல்போன் மற்றும் பயோமெட்ரிக் எந்திரம் வழங்கப்படுகிறது. இதைக்கொண்டு தபால் ஊழியர்கள் பொதுமக்களை நேரடியாக சென்று வங்கி கணக்கு தொடங்குகிறார்கள். கணக்கு தொடங்குவதற்கு முகவரிசான்று, அடையாள சான்று கொடுத்தால் போதும். வங்கி கணக்கை எளிதாக தொடங்கி விடலாம்.

தற்போது கிராமப்புரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த சேவை நகர பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்பட உள்ளது. இதற்காக கடலூர் தபால் கோட்டத்தில் உள்ள 2 தலைமை தபால் நிலையங்கள், 69 துணை தபால் நிலையங்களில் பணிபுரிந்து வரும் 113 தபால் ஊழியர்களுக்கு செல்போன் மற்றும் பயோமெட்ரிக் எந்திரம் நாளை(திங்கட்கிழமை) முதல் படிப்படியாக வழங்கப்பட உள்ளது.

இது குறித்து தபால் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

இந்திய போஸ்டல் பேமன்ட் வங்கியின் மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே வங்கி கணக்கு தொடங்கும் சேவை தபால் ஊழியர்கள் மூலம் கிராமப்புறங்களில் நடைபெற்று வருகிறது. இதற்காக கிராம தபால் ஊழியர்கள் 290 பேரில் 226 பேருக்கு செல்போன் மற்றும் பயோமெட்ரிக் எந்திரம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தபால் ஊழியர்களுக்கும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து நகர பகுதிகளில் வசிக்கும் மக்களும் வீட்டில் இருந்தபடியே வங்கி கணக்கு தொடங்குவதற்காக கடலூர் தபால் கோட்டத்தில் 2 தலைமை தபால்நிலையம் மற்றும் 69 துணை தபால் நிலையங்களில் பணிபுரிந்து வரும் 22 தபால் ஊழியர்களுக்கு செல்போன் மற்றும் ‘பயோமெட்ரிக்’ எந்திரம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 113 தபால் ஊழியர்களுக்கு நாளை(திங்கட்கிழமை) முதல் படிப்படியாக வழங்கப்பட உள்ளது.

கடலூர் தபால் கோட்டத்தில் இதுவரை சுமார் 3 ஆயிரம் போஸ்டல் பேமென்ட் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தபால் ஊழியர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து வங்கி கணக்கு தொடங்கும் பணியை மேற்கொள்வார்கள். இந்த வங்கி கணக்கில் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை பணத்தை செலுத்தலாம். அதேபோல் அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை எடுக்கலாம். இதில் ஒருவர், தனது கணக்கில் இருந்து பணத்தை எடுக்க வேண்டுமானால் ஒருநாளைக்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட தபால் ஊழியரிடம் போனில் தெரிவிக்க வேண்டும். மறுநாள் அவர் வீடு தேடி வந்து பணத்தை தருவார்.

மேலும் போஸ்டல் பேமென்ட் வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு கியூஆர் கார்டு ஒன்று வழங்கப்படும். இந்த கார்டை பயன்படுத்தி கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம். பணத்தை கையில் எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் அந்த கணக்கை போஸ்டல் பேமென்ட் வங்கி கணக்குடன் இணைத்துக்கொண்டால் அவரது கணக்கில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் ‘டெப்பாசிட்’ செய்யலாம். இவ்வாறு அதிக அளவில் பணம் டெப்பாசிட் செய்தாலோ, அல்லது வேறு வகையில் அதிக பணம் கணக்குக்கு வந்தாலோ போஸ்டல் பேமென்ட் வங்கி கணக்கில் அதிகபட்ச இருப்புதொகையான ரூ.1 லட்சம் போக மீதமுள்ள தொகை அவரது சேமிப்பு கணக்குக்கு சென்று விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story