கூடலூர்-ஊட்டி மலைப்பாதையில் விபத்து: 50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து போலீஸ்காரர் பலி 5 பேர் படுகாயம்
கூடலூர்-ஊட்டி மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
கூடலூர்,
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கேரள மாநிலம் வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களின் வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனர். இதன் அருகில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதி உள்ளது. இதனால் தமிழக பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் நுழைந்து விடாமல் தடுக்க தமிழக நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் வனப்பகுதிக்குள் அடிக்கடி ரோந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கூடலூர் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட திருப்பூரில் இருந்து தமிழக நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ஒரு வேனில் நவீன துப்பாக்கிகளுடன் நேற்று காலை புறப்பட்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி உள்பட 14 போலீசார் வேனில் இருந்தனர்.
தர்மபுரி மாவட்டம் வயிரநத்தம் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் மகன் அன்பரசன் (வயது 28) வேனை ஓட்டினார். ஊட்டி-கூடலூர் மலைப்பாதையில் மாலை 5 மணிக்கு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது வேன் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயத்தில் உள்ளதை டிரைவர் அறிந்தார். இதனால் சிறிது நேரம் சாலையோரம் நிறுத்த முடிவு செய்தார். அதன்படி ஊசிமலை மற்றும் தெய்வமலைக்கு இடையே சாலையோரம் நிறுத்தினார். இதனால் வேனில் இருந்து போலீசார் பலர் கீழே இறங்கினர். சிலர் வேனுக்குள் அமர்ந்து இருந்தனர். இந்த நிலையில் திடீரென வேன் சாலையோரம் உள்ள 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது வேனில் இருந்த சில போலீசார் புதருக்குள் குதித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெய்சிங், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் ஆம்புலன்சுகளும் உடனடியாக வரவழைக்கப்பட்டு, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.
தொடர்ந்து 6 பேர் மீட்கப்பட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிவகங்கை மாவட்டம் செஞ்சை பகுதியை சேர்ந்த போஸ் மகன் ராஜா (34) செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். மீதமுள்ள 5 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்றனர். அவர்கள் குறித்த விவரம் வருமாறு:-
உடுமலைப்பேட்டையை சேர்ந்த ராமையா மகன் மகுடீஸ்வரன் (32), பழனி அகளைமுத்து பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் துளசிராமன் (36), உடுமலைபேட்டையை சேர்ந்த தவசியப்பன் மகன் சதீஸ்பிரபு (33), தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்த பழனிசாமி மகன் நாகராஜ் (28), டிரைவர் அன்பரசன் (28) ஆகியோர் ஆவர்.
பின்னர் அனைவரும் மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் பெருந்தல்மன்னா தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விபத்து நடந்த மலைப்பாதையில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கொண்டு வந்திருந்த நவீன துப்பாக்கிகளை தேடி எடுக்கும் பணி நடந்தது. இந்த விபத்து குறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story