வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.80 லட்சம் தங்கம் பறிமுதல் வாலிபர் கைது


வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.80 லட்சம் தங்கம் பறிமுதல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 Feb 2019 9:45 PM GMT (Updated: 3 Feb 2019 6:45 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.80 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கேரள வாலிபரை கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், விமான நிலைய குடியுரிமை பகுதியில் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது குடியுரிமை பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் சந்தேகப்படும்படியாக கேட்பாரற்ற நிலையில் ஒரு பார்சல் கிடந்தது. அதை யாராவது எடுக்க வருகிறார்களா? என நீண்ட நேரமாக காத்திருந்தும், அதை சொந்தம் கொண்டாட யாரும் வரவில்லை. இதனால் அந்த பார்சலை எடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தனர்.

அதில் 10 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. ரூ.40 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 165 கிராம் எடைகொண்ட தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அந்த தங்கத்தை வெளிநாட்டில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த நபர், விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு பயந்து அதை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்று இருக்கலாம் என தெரிகிறது.

அந்த தங்கத்தை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மஸ்கட்டில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்ற பிறகு, சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்துக்குள் சென்று பார்த்தனர். அப்போது ஒரு இருக்கையின் அடியில் பார்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் 10 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. ரூ.40 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 165 கிராம் எடைகொண்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த விமான இருக்கையில் பயணம் செய்தது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்தனர். அதில் கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் ஹக்கீம் (வயது 32) என்பவர் வந்தது தெரிந்தது.

விமான நிலையத்தில் உடைமைகள எடுக்கும் பகுதியில் இருந்த அப்துல் ஹக்கீமை சுங்க இலாகா அதிகாரிகள் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அதில் அவர், மஸ்கட்டில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்ததாகவும், குறிப்பிட்ட அந்த இருக்கைக்கு அடியில் வைக்க வேண்டும் என்று கூறியதால் அதன்படி தான் வைத்துவிட்டு வந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

பின்னர் அந்த விமானம் உள்ளூர் விமானமாக செல்லும்போது, அதை உள்ளூர் பயணி போல் வரும் மற்றொருவர் வந்து எடுத்துக்கொள்வதற்காக இவ்வாறு வைத்துவிட்டு வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து அப்துல் ஹக்கீமை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், தங்கம் கடத்தலின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.80 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 330 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

Next Story