அமிர்தா எக்ஸ்பிரஸ் உடுமலையில் நின்று செல்வதால் ரெயில்வே துறைக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் அதிகாரிகள் தகவல்


அமிர்தா எக்ஸ்பிரஸ் உடுமலையில் நின்று செல்வதால் ரெயில்வே துறைக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 3 Feb 2019 10:45 PM GMT (Updated: 2019-02-04T01:13:21+05:30)

அமிர்தா எக்ஸ்பிரஸ் உடுமலையில் நின்றுசெல்வதால் ரெயில்வே துறைக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடுமலை,

திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம், பாலக்காடு, பொள்ளாச்சி,உடுமலை வழியாக மதுரைக்கு செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இதுவரை பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக பழனியில் நின்று சென்று வந்தது. பொள்ளாச்சி தாலுகா கோமங்கலம்புதூர் ரெயில் நிலையம் பகுதி வரை மதுரை ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்டது.

இதில் மதுரை கோட்டத்திற்குட்பட்ட திண்டுக்கல் -பொள்ளாச்சி செக்சனில் 2017- 2018 ம் ஆண்டில் இந்த ரெயில்களை சராசரியாக நாளொன்றுக்கு 4 ஆயிரத்து 830 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். 2018-2019-ம் ஆண்டில் இந்த ரெயில்களை சராசரியாக நாளொன்றுக்கு 6 ஆயிரத்து 543 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதே போன்று ரெயில்வே துறைக்கு வருமானமும் அதிகரித்துள்ளது. உடுமலை ரெயில் நிலையத்தில் இருந்து சராசரியாக நாளொன்றுக்கு 663 பயணிகள் ரெயில் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். உடுமலை ரெயில் நிலையத்தின் மூலம் சராசரியாக நாளொன்றுக்கு ரெயில்வே துறைக்கு ரூ.64 ஆயிரம் வருமானம் வந்தது. இது கடந்த ஆண்டைவிட 87 சதவீதம் கூடுதலாகும். இந்த நிலையில் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் உடுமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்வதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதன் மூலம், ரெயில்வே துறைக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். ரெயில் பயணிகளின் வசதிக்காக உடுமலை ரெயில் நிலையத்தில் விரைவில் வங்கி ஏ.டி.எம். வசதியும், வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதியும் செய்யப்பட உள்ளது.

இந்த தகவல்களை ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story