தொடர்ந்து 2–வது நாளாக அட்டகாசம்: சின்னதம்பி யானையை விரட்ட 2 கும்கிகள் வரவழைப்பு


தொடர்ந்து 2–வது நாளாக அட்டகாசம்: சின்னதம்பி யானையை விரட்ட 2 கும்கிகள் வரவழைப்பு
x
தினத்தந்தி 4 Feb 2019 4:30 AM IST (Updated: 4 Feb 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை வனப்பகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து 2–வது நாளாக புதருக்குள் முகாமிட்டுள்ள சின்னதம்பி யானையை விரட்ட 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

உடுமலை,

கோவை தடாகம், கணுவாய், பன்னிமடை பகுதியில் விநாயகன் மற்றும் சின்னதம்பி என்ற 2 யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன. இதில் விநாயகன் யானையை பிடித்து முதுமலை வனப்பகுதியிலும், சின்னதம்பி யானையை பிடித்து பொள்ளாச்சி அருகே வரகளியாறு வனப்பகுதியிலும் விட்டனர்.

சின்னதம்பி யானையின் கழுத்து பகுதியில் ரேடியோ காலருடன் கூடிய ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் வனத்துறையினர் சின்னதம்பி யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 31–ந் தேதி இரவு டாப்சிலிப் பகுதியில் இருந்து வெளியேறிய சின்னதம்பி யானை உடுமலையை அடுத்த கிருஷ்ணாபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே புதர் பகுதியில் நேற்று முன்தினம் புகுந்தது. இதையடுத்து சின்னதம்பியை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக கும்கி யானை கலீம் வரவழைக்கப்பட்டது.

நேற்று 2–வது நாளாக காலை முதல் மாலை வரை புதர் பகுதியிலேயே சின்னதம்பி யானை நின்றது. கும்கி கலீம் யானையை வைத்து சின்னதம்பியை வனப்பகுதிக்கு விரட்ட முடியவில்லை. அதனால் கும்கி கலீம் யானைக்கு உதவியாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து கும்கி யானை மாரியப்பன் வரவழைக்கப்பட்டது.

மாரியப்பன் யானையை வைத்து சின்னத்தம்பியை வனப்பகுதிக்குள் விரட்டி விட வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். சர்க்கரை ஆலைக்கு சொந்தமான 26 ஏக்கர் நிலத்தில் இருக்கும் கரும்புகளை சின்னதம்பி சாப்பிட்டு வருகிறது. மேலும் வன ஊழியர்களும், கரும்பு மற்றும் தண்ணீரை கொடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையே சின்னதம்பியை பார்க்க 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story