வரதட்சணை வழக்கில் 19 வருடங்களாக தலைமறைவாக இருந்தவர் கைது

மனைவியிடம் வரதட்சணை கேட்ட வழக்கில் சிவகாசி அனைத்து மகளிர் போலீசாரால் தேடப்பட்டவர் 19 வருடங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் சிவசாமி. இவரது மகள் ஈஸ்வரிக்கும், அதே பகுதியை சேர்ந்த விஜயராஜன் என்பவருக்கும் கடந்த 1998–ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால், அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதற்கிடையில் கணவர் விஜயராஜன் வரதட்சணை கேட்பதாக ஈஸ்வரி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விஜயராஜனை தேடி வந்தனர். ஆனால் அவர் திடீரென தலைமறைவானார்.
பின்னர் அவர் சென்னையில் தங்கி இருப்பதாகவும், அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசாரும் அவரை பல இடங்களில் தேடி வந்தனர். தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
அதன் பலனாக தலைமறைவாக இருந்த விஜயராஜன் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாஸ்டராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விருதுநகர் சிறையில் அடைத்தனர். கடந்த 19 வருடங்களாக தலைமறைவாக இருந்த விஜயராஜனை கைது செய்து சிறையில் அடைந்த இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாளை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.






