திருச்சி பெண்கள் சிறை வார்டன் தூக்குப்போட்டு தற்கொலை காதல் தோல்வி காரணமா? போலீசார் விசாரணை


திருச்சி பெண்கள் சிறை வார்டன் தூக்குப்போட்டு தற்கொலை காதல் தோல்வி காரணமா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 Feb 2019 5:00 AM IST (Updated: 4 Feb 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி பெண்கள் சிறை வார்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காதல் தோல்வி காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் அருகே உள்ள தவளக்குப்பத்தை சேர்ந்தவர் செல்லப்பன். இவருடைய மகள் செந்தமிழ்செல்வி(வயது23). இவர் திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் உள்ள பெண்கள் சிறையில் வார்டனாக பணியாற்றி வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு தேர்வு மூலம் சிறைக்காவலராக பணிக்கு சேர்ந்தவர் செந்தமிழ்செல்வி. 2018-ம் ஆண்டு முதல் சிறை வார்டனாக பதவி உயர்வு பெற்றார். திருச்சி கே.கே.நகரில் மத்திய சிறை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் ஒரு வீட்டில் தனியாக தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

சிறையில் ‘ஷிப்டு’ முறையில் வார்டன்கள் பணி செய்து வருகிறார்கள். நேற்று மாலை 6 மணிக்கு செந்தமிழ்செல்வி, பெண்கள் சிறைக்கு பணிக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் பணிக்கு வரவில்லை. அவருடைய செல்போனில் சக ஊழியர்கள் தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது.

எனவே, அவர் வீட்டில்தான் இருக்கிறாரா? அல்லது வெளியில் எங்கேனும் சென்று விட்டாரா? என அறிய சிறைக்காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டிற்கு சிறைக்காவலர்கள் சிலர் நேற்று இரவு 8 மணிக்கு சென்றனர். அங்கு வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே கதவை தட்டினர். நீண்டநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த அவர்கள், கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு படுக்கை அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்ட நிலையில் செந்தமிழ்செல்வி பிணமாக தொங்கினார். அவரது உடலை கைப்பற்றி போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடலூரில் உள்ள அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்கொலை செய்து கொண்ட சிறை வார்டன் செந்தமிழ்செல்விக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வாலிபர் யாரையாவது அவர் காதலித்து, அதன் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அல்லது சிறையில் பணியாற்றி வந்தபோது மனஅழுத்தம் ஏற்பட்டு அவர் உயிரை மாய்த்து கொண்டிருக்கலாமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறை வார்டன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது மத்திய சிறை வளாக காவலர் குடியிருப்பில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story