வலங்கைமான் அருகே மதுவில் விஷத்தை கலந்து குடித்து வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை
வலங்கைமான் அருகே மதுவில் விஷத்தை கலந்து குடித்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வலங்கைமான்,
வலங்கைமான் அருகே உள்ள நல்லூர் ஊராட்சி முடிக்கொண்டான் ஆறு தலைப்பு பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருடைய மகன் கார்த்தி (வயது 28). இவர் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அங்கு இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து கார்த்தி சொந்த ஊருக்கு வந்துள்ளார். இங்கு அவர் வேலைக்கு செல்லாததால் செலவுக்கு பணம் இல்லாமலும், மது அருந்த முடியாமலும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று கார்த்தி மதுவில் விஷத்தை கலந்து குடித்துள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்து கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்தி உயிரிழந்தார்.
இதுகுறித்து வலங்கைமான் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவகுகன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.