நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி - கோவையில் சீமான் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக கோவையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
கோவை,
கோவையில் வீரத்தமிழர் முன்னணி சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாம் தமிழர் கட்சி யின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கோவை வந்தார். அவரை அக்கட்சியின் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் கோவை ரெயில்நிலையம் எதிரே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரும் உயிருடன் இருப்பது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா போட்ட பிச்சை என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்து இருக்கிறார். நளினி உள்பட 7 பேர் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.
அவர்களை வெளியே கொண்டுவர பல போராட்டங்கள் நடத்தி வருகிறோம். அ.தி.மு.க. ஆட்சியில் இருப்பதும், செல்லூர் ராஜு அமைச்சராக பதவி வகிப்பதும் மக்கள் போட்ட பிச்சை. அமைச்சர் செல்லூர் ராஜு இங்கு இருக்க வேண்டியவர் அல்ல. அவர் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருக்க வேண்டியவர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக உள்ளோம். மற்றவர்கள் போல் நேர்காணல் எல்லாம் கிடையாது. 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறோம். அதில் 20 ஆண்களும், 20 பெண்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள். நாங்கள் காங்கிரஸ், பா.ஜனதா, தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை சமஅளவு எதிரிகளாகவே பார்க்கிறோம்.
தற்போது மத்திய அரசு அறிவித்து இருப்பது இடைக்கால நிதி அறிக்கை இல்லை. அடுத்த 5 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை கொடுத்து இருக்கிறார்கள். விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த தொகையை எப்போது கொடுப்பார்கள்? என்று தெரியாது. கடந்த நிதி நிலை அறிக்கையில் ஏன் இதுபோன்ற திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் வருகிறது என்பதால் இது மறைமுகமான கையூட்டு மற்றும் கவர்ச்சி கரமான அறிக்கையாகும். ராமேசுவரத்தில் நடந்த கடல் தாமரை மாநாட்டில் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தனி அமைச்சகம் அமைக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story