பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு - மராட்டிய அரசு
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மராட்டிய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
மும்பை,
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுடன் இந்த மசோதா சட்டம் ஆனது. இந்த சட்டத்தின்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ள பொதுப்பிரிவினர் இச்சலுகையை பெற தகுதியானவர்கள் ஆவர்.
இந்த சட்டம் நாட்டிலேயே முதல் மாநிலமாக குஜராத்தில் நடைமுறைக்கு வந்தது.
இமாசல பிரதேசம், பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், அசாம் ஆகிய மாநிலங்களிலும் அமலுக்கு வந்துவிட்டது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மராட்டிய அரசு நேற்று பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தது.
இதன் மூலம் பொதுப்பிரிவினருக்கான இந்த சலுகையை 7-வது மாநிலமாக மராட்டியம் அமலுக்கு கொண்டு வருகிறது. ஏற்கனவே மராட்டிய மாநிலத்தில் 68 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இந்த 10 சதவீதத்துடன் சேர்ந்து இது 78 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மராட்டிய நிதி மந்திரி சுதிர் முங்கண்டிவர் கூறுகையில், “மராட்டிய மந்திரிசபை பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைத்து சாதி மற்றும் மதத்தை சேர்ந்த பொதுப்பிரிவு மக்களுக்கும் 10 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பலன் கிடைக்கும்” என்றார்.
இதுகுறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-
மராட்டியத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பொது பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவாக சம்பாதிக்கும் குடும்பங்கள் இந்த இடஒதுக்கீட்டின் மூலமாக பயன் அடைவார்கள். அவர்கள் விவசாயம், ஊழியர்கள், தொழிற்துறை என எந்த துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பொருளாதாரத்தில் நலிவடைந்தர்களாக கருதப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
Related Tags :
Next Story