சாத்தான்குளத்தில் பரபரப்பு: செல்போன் கோபுரத்தில் அக்காளுடன் ஏறி இளம்பெண் தற்கொலை மிரட்டல்
சாத்தான்குளத்தில் 2–வது திருமணம் செய்த கணவரிடம் ஜீவனாம்சம் வாங்கி தருமாறு, செல்போன் கோபுரத்தில் அக்காளுடன் ஏறிச் சென்ற இளம்பெண் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சாத்தான்குளம்,
சாத்தான்குளத்தில் 2–வது திருமணம் செய்த கணவரிடம் ஜீவனாம்சம் வாங்கி தருமாறு, செல்போன் கோபுரத்தில் அக்காளுடன் ஏறிச் சென்ற இளம்பெண் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காதல் திருமணம்தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே வடலிவிளையைச் சேர்ந்தவர் கணபதி. இவருடைய மனைவி கிருஷ்ணம்மாள். இவர்களுடைய மகள் சண்முகசுந்தரி என்ற ஜமுனா (வயது 27). இவர் சென்னையில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை செய்தார். அப்போது இவரும், பெங்களூரைச் சேர்ந்த கார்த்திக் பசுபதியும் (32) காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு மன்சூர் (6) என்ற மகன் உள்ளார்.
இதற்கிடையே கணவன்–மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் பசுபதி தன்னுடைய மனைவியை விட்டு பிரிந்து, 2–வதாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்தார். இதனால் ஜமுனா தன்னுடைய கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் வாங்கி தருமாறு, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.
தற்கொலை மிரட்டல்இந்த நிலையில் ஜமுனா, அவருடைய மகன் மன்சூர், அக்காள் மீனா என்ற மீரா (30), தாயார் கிருஷ்ணம்மாள் ஆகிய 4 பேரும் நேற்று காலையில் சாத்தான்குளம் வந்தனர். சாத்தான்குளம் வாரச்சந்தை வளாகத்தில் மேற்கு நுழைவு வாயில் பகுதியில் சுமார் 100 அடி உயர செல்போன் கோபுரம் உள்ளது. அதில் ஜமுனாவும், மீராவும் ஏறினர். செல்போன் கோபுரத்தின் அடியில் கிருஷ்ணம்மாளும், மன்சூரும் நின்றனர்.
செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்ற ஜமுனாவும், மீராவும் தங்களது செல்போனில், 108 எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர்கள், கார்த்திக் பசுபதியால் ஜமுனாவுக்கு ரூ.5 லட்சம் கடன் ஏற்பட்டது. எனவே, ஜமுனாவுக்கு ஜீவனாம்சமாக கார்த்திக் பசுபதியிடம் இருந்து ரூ.5 லட்சம் வாங்கி தர வேண்டும். இல்லையெனில் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதற்கிடையே அக்காள்–தங்கை 2 பேரும் செல்போன் கோபுரத்தின் உச்சியில் இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
பேச்சுவார்த்தைஇதுகுறித்து தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜா சுந்தர் (சாத்தான்குளம்), கஜேந்திரன் (தட்டார்மடம்), ராஜூ (நாசரேத்), தாசில்தார் ஞானராஜ், துணை தாசில்தார் சுவாமிநாதன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் செல்போன் மூலம் ஜமுனாவை தொடர்பு கொண்டு பேசினர். தொடர்ந்து அவர்கள் கார்த்திக் பசுபதியிடமும் பேசினர்.
அப்போது கார்த்திக் பசுபதி வருகிற 11–ந்தேதி சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு வருவதாகவும், ஜமுனாவுக்கு ஜீவனாம்சம் தருவது குறித்து அப்போது தெரிவிப்பதாகவும் கூறினார். இந்த தகவல் தெரிவிக்கப்பட்டப்பின் ஜமுனா தனது அக்காள் மீராவுடன் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தனர். அவர்களை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1½ மணி நேரம் பரபரப்பு நிலவியது.