புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் தென்னை மரக்கன்றுகள் கலெக்டர் தகவல்


புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் தென்னை மரக்கன்றுகள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 Feb 2019 4:00 AM IST (Updated: 6 Feb 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் தென்னை மரக்கன்றுகள் விலை இல்லாமல் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

அரிமளம்,

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறையின் சார்பில், விலையில்லா தென்னை மரக்கன்றுகள் மற்றும் இடுபொருட்களை கலெக்டர் கணேஷ் வழங்கி, சாய்ந்த தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகளை பார்வையிட்டார். அப்போது வேளாண் இணை இயக்குனர் சுப்பையா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோமதிதங்கம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட போர்க்கால அடிப்படையிலான மீட்பு பணிகள் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை விரைவாக திரும்பியது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் சார்பில், பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல், நிவாரண உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விவசாயிகள் எளிதாக கீழே விழுந்து உள்ள மரங்களை அப்புறப்படுத்தும் வகையில், மரம் அறுக்கும் எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.85-க்கும், மட்டைகளை அறுக்கும் எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.340-க்கும் வாடகைக்கு வழங்கப்படுகிறது. எனவே வாடகைக்கு எந்திரம் தேவைப்படும் விவசாயிகள் தங்களது பகுதிகளில் உள்ள வேளாண் பொறியியல் துறையினரை அணுகி பயன்பெற வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள 15 ஆயிரத்து 372 தென்னை விவசாயிகளுக்கு, 3 லட்சத்து 50 ஆயிரம் எண்ணிக்கையிலான தென்னை மரக்கன்றுகள் விலை இல்லாமல் வழங்கப்பட உள்ளது.

மேலும் தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தென்னைக்கு இடையில் ஊடுபயிறாக பயிரிட உளுந்து மற்றும் எள்ளு போன்ற பயிர்கள் வழங்கப்படுவதுடன், இப்பயிர்களுக்கு தேவையான உயிர் உரங்கள், இடுபொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விலையில்லாமல் வழங்கப்பட உள்ளது. எனவே தென்னை விவசாயிகள் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இதுபோன்ற வேளாண் நலத்திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்கி வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story