பிச்சம்பாளையம்புதூர் மாநகராட்சி பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரி மாணவர்களுடன் பெற்றோர் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு


பிச்சம்பாளையம்புதூர் மாநகராட்சி பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரி மாணவர்களுடன் பெற்றோர் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 5 Feb 2019 10:45 PM GMT (Updated: 5 Feb 2019 9:50 PM GMT)

பிச்சம்பாளையம்புதூர் மாநகராட்சி பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி மாணவர்களுடன் பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் பி.என்.ரோடு பிச்சம்பாளையம்புதூரில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் 400–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு தலைமையாசிரியர் உள்பட 11 ஆசிரியர்கள் பணியாற்றி வந்த நிலையில் 4 காலியிடங்கள் அந்த பள்ளியில் இருந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அப்பள்ளியின் ஆசிரியர் மரியம் வேறு இடத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்டார். இதனால் அங்கு ஏற்கனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்து வந்த நிலையில் மேலும் ஒரு ஆசிரியர் பணியிட மாறுதலாகி சென்றதால் ஒரு சில வகுப்புகளுக்கு பாடம் எடுப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில நாட்களாக மாணவ–மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வரும் பெற்றோர் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களை திரும்ப வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்றும் வழக்கம் போல ஆசிரியர்கள் இல்லாததால் ஆத்திரமடைந்த பெற்றோர் சிலர் ஆசிரியர்கள் இல்லாத வகுப்பு மாணவர்களை அழைத்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் அனைவரும் திருப்பூர்–பெருமாநல்லூர் சாலையின் இருபுறமும் அமர்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் நல்லதம்பி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பெற்றோர் கூறுகையில்‘‘ கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வகுப்புகள் எடுக்கப்படாமல் இருந்தது. தற்போது வேலை நிறுத்தம் முடிந்தும் போதுமான ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் மாணவர்களுக்கு பாடம் எடுப்பதில்லை. இதே நிலை நீடித்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்’’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதன் பின்னரே பெற்றோர் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story