காரைக்குடியில் கள்ளநோட்டுகள்: முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பா? போலீசார் விசாரணை தீவிரம்


காரைக்குடியில் கள்ளநோட்டுகள்: முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பா? போலீசார் விசாரணை தீவிரம்
x
தினத்தந்தி 5 Feb 2019 11:15 PM GMT (Updated: 5 Feb 2019 10:32 PM GMT)

காரைக்குடியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது தொடர்பாக 4 பேர் பிடிபட்ட நிலையில் முக்கிய புள்ளிகளுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

காரைக்குடி,

காரைக்குடி இடையர் தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 29). இவர் தனது மோட்டார் சைக்கிளை ஒர்க்ஷாப் ஒன்றில் பழுதுபார்க்க விட்டிருந்தார். வேலை முடிந்த பின்பு பில் தொகை செட்டில் செய்தார். அப்போது அதில் மூன்று 100 ரூபாய் நோட்டுகள் வித்தியாசமாக இருப்பது தெரியவந்தது. ஒர்க்ஷாப் வைத்திருப்பவர் இது குறித்து கேட்க முரளி தமக்கு ஏதும் தெரியாது. சூடாமணி புரத்தைச் சேர்ந்த சேதுபதி (28) என்பவர் கொடுத்த நோட்டு எனக் கூறினார்

அதன்பின் முரளி இது குறித்து வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சேதுபதியை பிடித்து விசாரித்த போலீசார் அந்த நோட்டுகளை அவருக்கு துளாவூரில் இருக்கும் சிவரஞ்சனி (50) என்பவர் கொடுத்திருப்பது தெரிய வந்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் சிவரஞ்சனியின் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு 94 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கத்தைகத்திதையாக இருப்பதும் மற்றும் ரூபாய் நோட்டுகளை போலவே இருக்கும் குழந்தைகள் விளையாட பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் இருப்பதும் தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக கீழச்சிவல்பட்டியை சேர்ந்த சின்னையா (52), சிவரஞ்சனி, சேதுபதியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர்.

அப்போது இவர்களுக்கு விராலிமலையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கள்ள நோட்டுகளை கொடுத்து இருப்பது தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர். 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். குழந்தைகளை விளையாட பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் எதற்காக எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.

மேலும் நடந்த விசாரணையில் விருதுநகர், சிவகாசி பகுதியிலிருந்து கள்ளநோட்டுகள் திருச்சிக்கு வரும் என்றும் பின் அவை தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்படும் என்றும் 1 லட்சம் நல்ல ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் 3 லட்சம் கள்ளநோட்டுகளை தருவார்கள் என்றும் விசாரணையில் தெரியவந்தது

இந்த விவகாரத்தில் பெரிய கும்பலே ஈடுபட்டு வருவதும் அவர்களுக்கு பின்னால் முக்கிய புள்ளிகள் இருக்கலாம் எனவும் விசாரணையில் தெரிய வருகிறது. இது குறித்து போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டு கள்ளநோட்டு கும்பலை கூண்டோடு பிடிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story