சேலத்தில், ரூ.5 லட்சத்தில் மகளிருக்கான நடமாடும் கழிவறை வாகனம் - மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தார்


சேலத்தில், ரூ.5 லட்சத்தில் மகளிருக்கான நடமாடும் கழிவறை வாகனம் - மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Feb 2019 5:00 AM IST (Updated: 6 Feb 2019 4:44 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ரூ.5 லட்சத்தில் மகளிருக்கான நடமாடும் கழிவறை வாகனத்தை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்.

சேலம்,

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மகளிருக்கான நடமாடும் கழிப்பறை வாகனத்தினை ஆணையாளர் சதீஷ் கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் ஆணையாளர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், திருவிழாக்கள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் எல்லாம் மகளிர் நீண்ட நேரம் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் சிரமப்படுவதை உணர்ந்து, மாநகராட்சி நிர்வாகத்தால் மகளிருக்கான நடமாடும் கழிப்பறை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த வாகனத்தில் 2 இந்திய முறை கழிப்பறை, 2 மேற்கத்திய முறை கழிப்பறை என மொத்தம் 4 கழிப்பறைகள் உள்ளன. மகளிர் வாகனத்தில் சிரமமின்றி ஏறுவதற்கு வசதியாக படிக்கட்டுகள் உயரம் குறைவாக அமைக்கப்பட்டு உள்ளது. வாகனத்தின் உள்ளே நுழைந்தவுடன், முதலில் பாலூட்டும் தாய்மார்களுக்கென உள்ள அறையில் காற்றோட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் கழிப்பறைக்கு தேவைப்படும் தண்ணீரை, தேக்கி வைத்துக் கொள்வதற்கென இரண்டு மேல்நிலை தண்ணீர் தொட்டிகளும் வாகனத்தின் மேல்புறம் அமைக்கப்பட்டு உள்ளது. நடமாடும் கழிப்பறைக்கு தண்ணீர் தொட்டிக்கு தண்ணீரை கீழிருந்து மேலே நிரப்புவதற்கேற்ற வகையில் குழாய்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கழிவுகள் ஒரு தொட்டியில் சேகரிக்கப்பட்டு அதனை உறிஞ்சி எடுத்து கொள்ளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில், இது போன்ற பல வாகனங்கள் விரைவில் செயல்பட உள்ளது. இதனால் மகளிருக்கு எவ்வித இடையூறு இல்லாமல் இயற்கை உபாதைகளை கழிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர்கள் ரமேஷ்பாபு, கோவிந்தன், ஜெயராஜ், சுகாதார அலுவலர்கள் மணிகண்டன், ரவிச்சந்தர், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story