கடையநல்லூர் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு மேலும் 3 வீடுகளில் கொள்ளை முயற்சி
கடையநல்லூர் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
அச்சன்புதூர்,
கடையநல்லூர் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். அந்த பகுதியில் மேலும் 3 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
காற்றுக்காக கதவை...கடையநல்லூர் அருகே உள்ள துரைச்சாமிபுரம் மடத்தான் நாடார் தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மனைவி கற்பககவிதா(வயது 28). இவர் சம்பவதன்று இரவு காற்றுக்காக தனது வீட்டின் கதவை திறந்து வைத்து அருகே உள்ள அறையில் தூங்கி கொண்டிருந்தார். மற்றொரு அறையில் அவரது கணவர் தூங்கி உள்ளார்.
சங்கிலி பறிப்புஇந்நிலையில், நள்ளிரவில் தெரு விளக்கை அணைத்து விட்டு மொட்டை மாடி வழியாக இறங்கி வந்த மர்மநபர், தூங்கி கொண்டிருந்த கற்பககவிதா கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடினான். அப்போது கண் விழித்த கவிதா அதிர்ச்சியுடன் திருடன்...திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தத்தை கேட்டு கண்விழித்த அவரது கணவரும், கவிதாவும் சேர்ந்து மர்மநபரை துரத்தி சென்றனர். ஆனால் அதற்குள் மர்மநபர் வீட்டிற்குள் இருந்து வெளியேறி இருளில் ஓடி தப்பி சென்றுவிட்டான்.
3 வீடுகளில் கொள்ளை முயற்சிஇதுகுறித்து இலத்தூர் போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர். மேலும் அதே பகுதியில் மூன்று வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஆனால் அந்த வீடுகளில் பொருட்கள் ஏதும் திருடு போகவில்லை.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.