வடகாடு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறை தீவிரம்
வடகாடு மலைப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சத்திரப்பட்டி,
ஒட்டன்சத்திரத்தை அடுத்த வடகாடு மலைப்பகுதியில் சிறுவாட்டுக்காடு, புலிக்குத்திக்காடு, பெத்தேல்புரம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு கடந்த சில நாட்களாகவே காட்டுயானை ஒன்று சுற்றி திரிகிறது. இதனால் இரவில் வெளியே செல்ல பொதுமக்கள், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் புலிக்குத்திக்காட்டை சேர்ந்த ராமன் (வயது 45) என்பவர் ஒட்டன்சத்திரத்தில் மளிகை பொருட்களை வாங்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பெத்தேல்புரத்தை அடுத்த ஒரு வளைவில் வந்தபோது, சாலையின் குறுக்கே யானை நின்று கொண்டிருந்தது. இதைக் கண்டு பயந்துபோன அவர் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். பின்னர் அந்த யானை மோட்டார் சைக்கிளில் ஒரு பையில் இருந்த மாவை தின்றுவிட்டு சென்றது. இதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து வீடு சென்றார்.
இந்நிலையில் வடகாடு மலைப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டுயானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளை வைத்துள்ளனர். மாலை, இரவு நேரங்களில் மலைப்பகுதிகளில் வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும் என பொதுமக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் ஒட்டன்சத்திரம் வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் யானை நடமாட்டம் உள்ள பகுதிகளை கண்காணித்து, அவற்றை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story