மயிலம் அருகே மரத்தில் கார் மோதல், டிரைவர் பலி - சிறுமி உள்பட 5 பேர் படுகாயம்


மயிலம் அருகே மரத்தில் கார் மோதல், டிரைவர் பலி - சிறுமி உள்பட 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Feb 2019 4:45 AM IST (Updated: 7 Feb 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

மயிலம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

மயிலம்,

திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி பிரான்சிஸ்ராஜம் (வயது 58). இவரது மகன் செல்லதுரை குடும்பத்துடன் சென்னையில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். செல்லதுரையின் மனைவி ஷெர்லிக்கு வருகிற 10-ந்தேதி சென்னையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரான்சிஸ்ராஜம் தனது உறவினர்களுடன் சென்னை செல்ல முடிவு செய்தார்.

அதன்படி நேற்று காலை பிரான்சிஸ்ராஜம் தனது பேத்தி தாட்னி(2½), உறவினர்கள் மோசஸ்(77), சந்தானதாஸ் மனைவி சகாயமேரி(77) மற்றும் நண்பர் ரவிச்சந்திரன்(55) ஆகியோருடன் ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டார். காரை திருச்சி ஸ்ரீரங்கம் சண்முகாநகரை சேர்ந்த நடராஜன் மகன் மாரிமுத்து(38) என்பவர் ஓட்டினார்.

இவர்களது கார் மயிலம் அடுத்த திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் 12 மணியளவில் சென்று கொண்டிருந்தது. தென்பசியார் என்ற இடத்தில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதி நின்றது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. கார் இடிபாட்டில் சிக்கிய டிரைவர் மாரிமுத்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரான்சிஸ்ராஜம் உள்ளிட்ட 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப்-இன்ஸ்பெக்டர் எழிலரசி ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் படுகாயமடைந்த நிலையில் காருக்குள் சிக்கி இருந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே விபத்தில் பலியான டிரைவர் மாரிமுத்துவின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story