மகன் விருப்ப மனு ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட தனது மகன் விருப்ப மனு வாங்கியது குறித்து, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
ஆலந்தூர்,
துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். முன்னதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:–
அ.தி.மு.க. தலைமையில்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமையும். கூட்டணி குறித்து தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம். கூடிய விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்.
அ.தி.மு.க.வில் உள்ள அடிப்படை உறுப்பினர்கள் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை இருக்கிறது. அந்த வகையில்தான் எனது மகன் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்து உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி முடிவான பிறகு அ.தி.மு.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது பற்றி தெரிவிக்கப்படும். குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் இருக்காது என்று ஓ.பன்னீர்செல்வம் சொன்னாரே?. இப்போது அவரது மகனை தேர்தலில் போட்டியிட வைத்து இருக்கிறாரே? என்று தினகரன் சொல்லி இருக்கிறார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது 2014–ல் சசிகலா உள்ளிட்ட குடும்பத்தினர் 16 பேரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார். சில மாதங்களில் சசிகலா, எனக்கு தெரியாமல் ஜெயலலிதாவுக்கு பல இடையூறுகள் ஏற்படுத்தி இருப்பது தற்போதுதான் எனது கவனத்துக்கு வந்ததாக கூறி மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார்.
அதனால் ஜெயலலிதாவும் மன்னித்து, சசிகலாவை மட்டும் தான் உதவியாளராக சேர்த்து உள்ளேன். மற்றவர்கள் என்னால் நீக்கியது நீக்கியதுதான் என்று ஜெயலலிதா வெளிப்படையாக கூறிய அதே நிலைதான் இன்று வரை நீடிக்கிறது.
நான் தர்மயுத்தம் தொடங்கியபோது கட்சி, ஆட்சி ஆகியவை தினகரன் குடும்பத்தின் இரும்பு கரத்தில் இருந்தது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தொண்டர்கள் இயக்கமாகதான் நடத்தினார்கள். ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தனிப்பட்ட குடும்பம் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்தபோதுதான் தர்மயுத்தம் ஆரம்பித்தேன்.
அந்த குடும்பத்தைத்தான் சொன்னேன். தகுதி இருந்தால், திறமை இருந்தால் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் ஏற்றுக்கொண்டால் அரசியலில் நீடிப்பார்கள்.
நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜனவரி 23–ந் தேதி ஆஜராக சம்மன் அனுப்பினார்கள். உலக முதலீட்டாளர்கள் மாநாடு இருந்ததால் நானே விசாரணை கமிஷன் கூறும் மறு தேதியில் ஆஜராவதாக கூறியிருந்தேன்.
அதற்கு பிறகு 2 முறை தள்ளி வைக்கப்பட்டது. இதற்கான காரணம் எனக்கு தெரியாது. தள்ளி வைக்கப்பட்ட செய்திதான் எனக்கு வந்தது. விசாரணை கமிஷன் எப்போது அழைத்தாலும் அங்கு சென்று உண்மை நிலையை எடுத்துச் சொல்வேன். பத்திரிகையில் வரும் தகவல்கள் உண்மையல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.