‘மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சர் நாற்காலியில் அமருவார்’ உதயநிதி ஸ்டாலின் பேச்சு


‘மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சர் நாற்காலியில் அமருவார்’ உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 6 Feb 2019 11:30 PM GMT (Updated: 6 Feb 2019 9:28 PM GMT)

மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சர் நாற்காலியில் அமருவார் என்று கிராமசபை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

பூந்தமல்லி,

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட பானவேடு தோட்டம் ஊராட்சியில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஆவடி நாசர் தலைமையில் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து விபத்தில் காயம் அடைந்த தி.மு.க. பிரமுகரின் மகனுக்கு மருத்துவ செலவுக்கு ரூ.10 ஆயிரம் அளித்தார்.

பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:–

இந்த கூட்டத்தில் நம்பிக்கையுடன் வந்துள்ளீர்கள். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சர் நாற்காலியில் விரைவில் அமருவார். உங்கள் குறைகளை சொல்லுங்கள். அதை தலைவரிடம் எடுத்து சொல்வேன். தற்போது உள்ளாட்சி அமைப்புகள் இல்லை, உள்ளாட்சி தேர்தல் நடத்தாதும் தான் இதற்கெல்லாம் காரணம், மோடி தமிழகத்திற்கு வருவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து பொதுமக்கள் கூறிய குறைகள் கேட்டறிந்தார். இதில் பாரிவாக்கம் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும், பாதாள சாக்கடை திட்டம், முதியோர் உதவித்தொகை, ரே‌ஷன் கடையில் முறையாக பொருட்கள் வழங்குவதில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள தேவந்தவாக்கம், சோமதேவன்பட்டு போன்ற ஊராட்சிகளில் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டம் நடந்தது. பூண்டி ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, கிளை செயலாளர் ஆப்ரகாம், தில்லைகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வம் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

ஆவடியில் இருந்து மெய்யூர் வரை இயக்கப்படும் மாநகர பஸ்சை தேவந்தவாக்கம் வழியாக சீதஞ்சேரி வரை நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைகளில் தூர்வார வேண்டும். சோமதேவன்பட்டு கிராம எல்லையில் கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

இவற்றை பெற்று கொண்ட செல்வம் எம்.எல்.ஏ. இது குறித்து மாவட்ட கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் தெரிவித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் மணி, ரேனு, கர்ணன், முனுசாமி, பஞ்சாட்சரம், ரமேஷ், பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story