பவானிசாகர் வனப்பகுதியில் 2 புலிகளுக்கு இடையே கடும் சண்டை, ஒரு புலி சாவு
பவானிசாகர் வனப்பகுதியில் 2 புலிகளுக்கு இடையே நடந்த கடும் சண்டையில் ஒரு புலி இறந்தது.
பவானிசாகர்,
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பவானிசாகர் வனப்பகுதியில் உள்ளது தெங்குமரகடா. இங்கு யானை, மான், புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறையினர் தினமும் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை வனத்துறையினர் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஓரிடத்தில் புலி ஒன்று இறந்து கிடந்தது.
இதுகுறித்து வனத்துறையினர் சத்தியமங்கலம் புலிகள் காப்பக மாவட்ட வன அதிகாரி அருண்லாலுக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர் மற்றும் கால்நடை டாக்டர் அசோகன் ஆகியோர் அங்கு சென்று இறந்த புலியின் உடலை பார்வையிட்டனர்.
அதன்பின்னர் கால்நடை டாக்டர் புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். அப்போது அவர், இறந்தது சுமார் 5 வயதுடைய ஆண் புலி. ஒரு பெண் புலிக்காக 2 ஆண் புலிகள் கடுமையாக சண்டை போட்டுள்ளன. இதில் ஒரு ஆண் புலி மற்றொரு ஆண் புலியை கடித்து கொன்று இருக்கலாம்.’ என்றனர்.
அதைத்தொடர்ந்து இறந்து கிடந்த புலியின் பற்கள் மற்றும் நகங்கள் வெட்டி எடுக்கப்பட்டன. பின்னர் அங்கேயே புலியின் உடல் தீவைத்து எரிக்கப்பட்டது.
Related Tags :
Next Story