‘‘மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்துவிட்டது; வருங்கால சந்ததியை காப்பது அவசியம்’’ வருமானத்துக்கு டாஸ்மாக் கடைகளை அரசு நம்பி இருக்கக்கூடாது மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடி கருத்து


‘‘மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்துவிட்டது; வருங்கால சந்ததியை காப்பது அவசியம்’’ வருமானத்துக்கு டாஸ்மாக் கடைகளை அரசு நம்பி இருக்கக்கூடாது மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடி கருத்து
x
தினத்தந்தி 7 Feb 2019 5:00 AM IST (Updated: 7 Feb 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

‘‘அரசின் வருமானத்துக்கு டாஸ்மாக் கடைகளை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது, மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்துவிட்டது. வருங்கால சந்ததியை காப்பது அவசியம்’’ என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரை,

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனையை தமிழக அரசே நடத்தி வருகிறது. இதன்மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

ஏற்கனவே குடியிருப்பு பகுதிகள், வழிபாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட தடை கோரி ஐகோர்ட்டுகளில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, பல்வேறு கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் இளைஞர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது, மது விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும், மதுப்பழக்கத்தால் ஏற்படும் தீங்குகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் மேலும் கூறி இருப்பதாவது:–

தமிழகத்தில் கடந்த ஆண்டு ரூ.31 ஆயிரத்து 244 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது. பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயித்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. மது பழக்கத்தால் நிம்மதியின்மை, உடல் நலக்குறைவு உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்கவும், மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்கவும், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலைப்பட்டியல் வைக்கவும், மது விற்பனைக்கு ரசீது வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

மேலும் கூடுதல் விலைக்கு மது விற்றால் புகார் அளிக்க உயர் அதிகாரிகளின் தொடர்பு எண் மற்றும் விவரங்களை டாஸ்மாக் கடைகளில் எழுதி வைக்கவும் வேண்டும். மதுபானத்தில் கலந்துள்ள பொருட்கள் மற்றும் தயாரிப்பாளர் விவரங்களை தமிழில் குறிப்பிடவும், டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றி அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பள்ளி–கல்லூரி மாணவ–மாணவிகள் மது அருந்துவது போன்ற காட்சிகளை கொண்ட புகைப்படங்கள் ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும், டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நேரத்தை குறைக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘இங்கு 24 மணி நேரமும் மது கிடைக்கிறது. அப்படி இருக்கும்போது, மதுக்கடைகளின் நேரத்தை மாற்றி அமைப்பதால் மட்டும் என்ன பயன்?’’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, ‘‘மது விற்பனையை முறைப்படுத்த பல்வேறு விதிகளும், அரசாணைகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன’’ என்று தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள் தெரிவித்த கருத்து வருமாறு:–

விதிகள் உள்ளன. ஆனால் அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை. டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதா? சமுதாயத்தில் ஏராளமான பிரச்சினைகளுக்கு மதுதான் காரணம். டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால் பெரும்பாலான குற்றங்கள் குறையும்.

அரசின் வருமானத்துக்கு டாஸ்மாக் கடைகளை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது. வருவாயை பெருக்குவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. அந்த வழிகளை பின்பற்றுவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்துவிட்டது. வருங்கால சந்ததியினரை மதுப்பழக்கத்தில் இருந்து காப்பது அவசியம்.

எனவே கிராமசபை கூட்டங்களை நடத்தி மதுக்கடைகள் வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றலாம்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் இந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 28–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story