திருப்பூர் ராயபுரம் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
திருப்பூர் ராயபுரம் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் மாநகரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் ராயபுரம் பகுதி பூங்காவிற்கு அருகே சாலையோரத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இதையொட்டி கடைகள் உள்ளன.
இந்த நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான இந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டு, வாகன நிறுத்தும் இடமாகவும் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையோரத்தில் சிறிய அளவிலான பூங்கா வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.
இதற்காக அளவிடும் பணி நேற்று நடந்தது. மேலும், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளையும் அங்கிருந்து அகற்றும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கடை உரிமையாளர்கள் அந்த பகுதியிலுள்ள பொதுமக்களுடன் இணைந்து அங்கு வந்திருந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டனர். ஆனால் அதிகாரிகளின் உத்தரவுபடி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தனர்.
ஆனாலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டு பொதுமக்கள் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், எங்களால் வாகன ஓட்டிகளுக்கோ, பாதசாரிகளுக்கோ எந்த வித இடையூறும் இல்லை. இதனால் மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story