கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எச்.ராஜா பேட்டி


கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 7 Feb 2019 11:15 PM GMT (Updated: 7 Feb 2019 3:18 PM GMT)

கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று எச்.ராஜா கூறினார்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பா.ம.க. முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டதையொட்டி திருபுவனத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று வந்தார். அங்கு அவர், ராமலிங்கத்தின் மனைவி சித்ரா, மகன்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். ராமலிங்கத்தின் மூத்த மகன் ஷியாம்சுந்தரிடம், நடந்த விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் எச்.ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

நாடு வல்லரசாக வேண்டும். அவரவர் மதத்தை அவரவர் மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நியாயமாக, அறிவுப்பூர்வமாக ராமலிங்கம், மதம் மாற்ற வந்தவர்களிடம் விவாதம் செய்துள்ளார்.

ஆனால் அவர்கள், இவரிடம் மதம் மாற வலியுறுத்தியதால் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு இருப்பது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்து உள்ளது.

திருபுவனத்தில் மதமாற்றத்தை தடுக்க முயன்றவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதை தடுக்க கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். இந்த நாட்டில் மதச்சார்பின்மை என்பது இந்துக்கள் மட்டும் உபயோகப்படுத்தும் வார்த்தையாக உள்ளது.

ராமலிங்கம் கொலை சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் யார்? என்பதை போலீசார் உடனடியாக கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story