கோவில்பட்டியில் பரபரப்பு 1¼ வயது ஆண் குழந்தையை கோவிலில் விட்டுச் சென்ற பெண் போலீசார் விசாரணை


கோவில்பட்டியில் பரபரப்பு 1¼ வயது ஆண் குழந்தையை கோவிலில் விட்டுச் சென்ற பெண்  போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 Feb 2019 10:30 PM GMT (Updated: 7 Feb 2019 3:52 PM GMT)

கோவில்பட்டியில் 1¼ வயது ஆண் குழந்தையை கோவிலில் விட்டுச் சென்ற பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் 1¼ வயது ஆண் குழந்தையை கோவிலில் விட்டுச் சென்ற பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1¼ வயது ஆண் குழந்தை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் வளாகத்தில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இங்கு நேற்று மாலையில் ஒரு பெண், 1¼ வயது ஆண் குழந்தையுடன் வந்தார். அந்த பெண் திடீரென்று அந்த குழந்தையை சன்னதி முன்பு விட்டுச் சென்றுவிட்டார்.

சிறிதுநேரத்தில் அந்த குழந்தை அழுதது. இதனைப் பார்த்த கோவில் ஊழியர்கள், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையை விட்டுச் சென்ற பெண்ணை கோவில் முழுவதும் தேடினார்கள். ஆனால் அந்த பெண் அங்கு இல்லை. உடனே அந்த குழந்தையை கோவில் ஊழியர்கள் எடுத்து வைத்தனர்.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்டெல்லாபாய் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த குழந்தையை போலீசார் வாங்கி சென்று, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அந்த குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

கோவில் வளாகத்தில் குழந்தையை விட்டு சென்ற பெண் யார்?, அவர் எதற்காக குழந்தையை விட்டு சென்றார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கோவிலில் ஆண் குழந்தையை பெண் விட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story