சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்வதாக ரூ.10 லட்சம் மோசடி - திருச்சி வாலிபர் கைது


சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்வதாக ரூ.10 லட்சம் மோசடி - திருச்சி வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 Feb 2019 10:30 PM GMT (Updated: 7 Feb 2019 6:10 PM GMT)

சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்வதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக திருச்சி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாசிலாமணி புரத்தை சேர்ந்தவர் காதர். இவர் அந்த பகுதியில் அரிசி ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்தநிலையில் திருச்சி தென்னூர் காயிதேமில்லத்நகரை சேர்ந்த முகமது இக்பால் என்பவர் காதருக்கு அறிமுகம் ஆனார். அப்போது தனது மகன் சையது அலியுடன் சேர்ந்து ஒரு நிறுவனம் நடத்துவதாக அவர் கூறினார். மேலும் அந்த நிறுவனம் மூலம் வெளிநாட்டுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதாக காதரிடம் தெரிவித்தார்.

அவ்வாறு அரிசியை ஏற்றுமதி செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் கூறினார். இதை உண்மை என நம்பிய காதர் வெளிநாட்டுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய விரும்பினார். இதையடுத்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வதற்கு அரிசி தேவைப்படுவதாக முகமதுஇக்பால் கூறினார். அதன்பேரில் காதர், 4 தவணையாக அரிசி மூட்டைகளை முகமதுஇக்பாலுக்கு அனுப்பி வைத்தார்.

அந்த வகையில் காதருக்கு, முகமதுஇக்பால் ரூ.10 லட்சத்து 15 ஆயிரம் கொடுக்க வேண்டியது இருந்தது. ஆனால், பணத்தை கொடுக்காமல் அவர் ஏமாற்றி வந்தார். அதுபற்றி கேட்டபோது மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் காதர் புகார் செய்தார். அந்த புகார் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

அதன்பேரில் முகமதுஇக்பால், அவருடைய மகன் சையதுஅலி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் சையது அலியை (வயது 31) போலீசார் கைது செய்தனர். மேலும் முகமதுஇக்பாலை தேடி வருகின்றனர். 

Next Story