நாகையில் மனுதர்ம சாஸ்திர நகலை எரித்து திராவிடர் கழகத்தினர் போராட்டம் 22 பெண்கள் உள்பட 48 பேர் கைது


நாகையில் மனுதர்ம சாஸ்திர நகலை எரித்து திராவிடர் கழகத்தினர் போராட்டம் 22 பெண்கள் உள்பட 48 பேர் கைது
x
தினத்தந்தி 8 Feb 2019 4:30 AM IST (Updated: 8 Feb 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் மனுதர்ம சாஸ்திர நகலை எரித்து திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 22 பெண்கள் உள்பட 48 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ் நிலையம் அருகே அவுரித்திடலில் திராவிடர் கழகம் சார்பில் சனாதனத்தை ஆதரிக்கும் மனுதர்ம சாஸ்திர நகலை எரிக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் கமலம் தலைமை தாங்கினார். நாகை மாவட்ட மகளிரணி தலைவர் பேபி, செயலாளர் சுமதி, மயிலாடுதுறை மாவட்ட மகளிரணி தலைவர் வசந்தா ஜெகதீசன், கீழ்வேளூர் ஒன்றிய மகளிரணி செயலாளர் சுலோச்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நாகை மாவட்ட தலைவர் நெப்போலியன், மண்டல தலைவர் ஜெகதீசன், பகுத்தறிவு நாகை மாவட்ட தலைவர் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழக நாகை நகர செயலாளர் செந்தில் குமார் உள்பட திராவிடர் கழகத்தினர் மனுதர்ம சாஸ்திர நகலை எரித்து கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 48 பேரை கைது செய்து, அவர்களை நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story