நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்பட்டது வெளிநாட்டு பயணிகள் உற்சாக பயணம்


நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்பட்டது வெளிநாட்டு பயணிகள் உற்சாக பயணம்
x
தினத்தந்தி 8 Feb 2019 4:30 AM IST (Updated: 8 Feb 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் இருந்து கன்னியா குமரிக்கு பழமையான நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்பட்டது. இதில் வெளிநாட்டு பயணிகள் உற்சாக பயணம் செய்தனர்.

நாகர்கோவில்,

ரெயில்வே துறை சார்பில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக மிகவும் பழமை வாய்ந்த நீராவி என்ஜினுடன் கூடிய ‘ஹெரிடேஜ் ரெயில்’ என்ற பாரம்பரிய ரெயில் ஒவ்வொரு பகுதியாக இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடங்களில் இந்த ரெயில் இயக்கப்படுகிறது.

இந்தநிலையில் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு நீராவி என்ஜின் ரெயிலை இயக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக 163 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி என்ஜின் கடந்த சில தினங்களுக்கு முன் நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதை தொடர்ந்து நீராவி என்ஜின் ரெயில் இயக்கம் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கப்பட்டது. ரெயிலை திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளர் சிரீஸ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதல் நாளான நேற்று 20 பயணிகள் அந்த ரெயில் மூலம் கன்னியாகுமரிக்கு உற்சாக பயணம் மேற்கொண்டனர். அவர்கள் அனைவருமே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆவர். எனினும் ரெயில் பயணம் தொடங்கிய போது ஏராளமான பயணிகள் அங்கு திரண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நீராவி என்ஜினில் இணைக்கப்பட்டு இருக்கும் ரெயில் பெட்டியில் குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. பயணிகளுக்கு தனித்தனி சொகுசு இருக்கைகள் இருந்தன.

இந்த ரெயில் முழுக்க முழுக்க நிலக்கரியால் இயக்கப்படுகிறது. மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ரெயில் செல்லும். அந்த வகையில் நாகர்கோவில்- கன்னியாகுமரி இடையே உள்ள 20 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரெயில் சென்றடைய 30 நிமிடங்கள் ஆகும். இந்த பழமை வாய்ந்த ரெயிலில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதுவே வெளிநாட்டு பயணிகள் என்றால் கட்டணம் ரூ.1,500 ஆகும்.

இதுபற்றி ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “திருவனந்தபுரம் கோட்டத்தில் முதல் முறையாக நாகர்கோவில் முதல் கன்னியா குமரிக்கு நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் ஏற்படும் வரவேற்பை தொடர்ந்து நீராவி என்ஜின் ரெயிலை எவ்வளவு நாட்கள் இயக்கலாம்? என்று முடிவு செய்யப்படும். இதற்கு அடுத்தபடியாக எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இந்த ரெயில் இயக்கப்பட இருக்கிறது” என்றார். 

Next Story