சுற்றுச்சூழலுக்கு பாதிக்காத வகையில் மின்சார பஸ்கள் விரைவில் கொண்டு வரப்படும் அமைச்சர் தகவல்


சுற்றுச்சூழலுக்கு பாதிக்காத வகையில் மின்சார பஸ்கள் விரைவில் கொண்டு வரப்படும் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 8 Feb 2019 4:30 AM IST (Updated: 8 Feb 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சூழலுக்கு பாதிக்காத வகையில் மின்சார பஸ்கள் விரைவில் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் புதிதாக கட்டப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்து வாகன ஓட்டிகளுக்கு பழகுனர் உரிமத்தை வழங்கினர்.

தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் பொது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒத்துழைப்புடன் அன்னவாசல், விராலிமலை, திருமயம், ஆலங்குடி போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு புதிய பஸ் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவிலான பணிமனைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மிகுந்த பயன்பெற்றுள்ளனர். இதே போன்று பயணிகளின் வசதிக்காக புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு படுத்து கொண்டே செல்லும் வகையிலான சூப்பர் டீலக்ஸ் பஸ் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு பஸ் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், கந்தர்வகோட்டை முதல் சென்னைக்கு புதிய பஸ் வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழக அரசானது, அரசு பஸ்கள் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை வழங்கி வருகிறது. பயணிகள் நலனுக்காக படுக்கை வசதி கொண்ட பஸ்கள் இயக்கப்படுவதுடன், வயதானவர்கள் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் கழிவறை வசதிகளுடன் கூடிய பஸ்கள் இயக்கப்படுகிறது.

தமிழக போக்குவரத்து துறையை முன்னேற்றும் வகையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2,000 புதிய பஸ்கள் வழங்கினார். தற்போதைய முதல்-அமைச்சர் 3,000 புதிய முதலில் உத்தரவிட்டதை தொடர்ந்து 500 புதிய பஸ்களாக பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு வருகிறது. போக்குவரத்து துறையின் சார்பில், பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி புதிய வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் தொடங்கப்பட்டு வருவதுடன் வாகனம் உரிமம் பெறுபவர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் கட்டமாக செங்கல்பட்டில் இருந்து திருச்சி வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் வெளிநாடுகளில் இருப்பது போல சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தானியங்கி அபராத முறை நடைமுறைபடுத்தபட உள்ளது. இதுபோல பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 5 சாலைகளை தேர்வு செய்து இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் போக்குவரத்து துறை நவீனமாக மாற்றப்படும்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் மின்சார பஸ்கள் விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், வட்டார போக்குவரத்து அதிகாரி பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஆறுமுகம், கூட்டுறவு சங்கத்தலைவர் சின்னதம்பி, எஸ்.வி.எஸ். ஜெயக்குமார், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் செபஸ்தியான், அமைச்சர் உதவியாளர்கள் அன்பானந்தம், வெங்கடேசன், அசோக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story