மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கரிசல் திரைவிழா களை கட்டியது சினிமா நடிகர், இயக்குனர் பங்கேற்பு


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கரிசல் திரைவிழா களை கட்டியது  சினிமா நடிகர், இயக்குனர் பங்கேற்பு
x
தினத்தந்தி 9 Feb 2019 3:30 AM IST (Updated: 8 Feb 2019 8:20 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கரிசல் திரைவிழா நேற்று தொடங்கியது. இதில் சினிமா நடிகர், இயக்குனர் ஆகியோர் பங்கேற்றனர்.

பேட்டை,

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கரிசல் திரைவிழா நேற்று தொடங்கியது. இதில் சினிமா நடிகர், இயக்குனர் ஆகியோர் பங்கேற்றனர்.

கரிசல் திரைவிழா

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறை சார்பில் ஆண்டுதோறும் கரிசல் திரைவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 14–வது கரிசல் திரைவிழா பல்கலைக்கழக வ.உ.சி. கலையரங்கில் நேற்று தொடங்கியது.

தொடக்க விழாவில் தொடர்பியல் துறை தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் விழாவை தொடங்கி வைத்தார். மேலும் அவர் வெற்றிக் கோப்பையை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

பத்திரிகை, ஊடகம், சினிமா ஆகியவை எப்போதும் மக்களிடம் நேரடியாக தகவல்களை கொண்டு சேர்ப்பவை. தொடர்பியல் துறையினர் தங்களது செயல்களை நடுநிலையோடு செய்ய வேண்டும். சமுதாயத்துக்கு நல்ல தகவல்களை கொடுக்க வேண்டும். சமுதாய வளர்ச்சிக்கு உங்களது பங்களிப்பு இருக்க வேண்டும். நாட்டில் பெரும் பிரச்சினையாக இருக்கும் சாதி, மத, இன வேறுபாடுகளை களைந்து ஒரே சமுதாயமாக இருக்கச் செய்வதில் தொடர்பியல் துறையினர் தங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சினிமா நடிகர்

பதிவாளர் சந்தோஷ் பாபு வாழ்த்தி பேசினார். இதில் சினிமா நடிகர் வேல ராமமூர்த்தி, இயக்குனர் மணி நாகராஜ், எடிட்டர் சாபு ஜோசப், ஒளிப்பதிவாளர் பிரமோத் வர்மா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி பேசுகையில் கூறியதாவது:–

நான் ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி கிராமத்தை சேர்ந்தவன். நெல்லை மாவட்டம், விடுதலை போரின் போது சுதந்திர போராட்டத்துக்கு அதிகமானோரை தந்த மாவட்டம் ஆகும். மேலும் தமிழ், கலைகளை வளர்த்த பூமி ஆகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த நெல்லை மண்ணில் நின்று பேசுவதில் பெருமை அடைகிறேன். என்னை இந்த இடத்தில் பேசுவதற்கு கொண்டு வந்து நிறுத்தி இருப்பது என்னுடைய எழுத்துக்கள்தான்.

நான் ராணுவம் மற்றும் அஞ்சல் துறையில் பணிபுரிந்துள்ளேன். 25 ஆண்டுகளாக எழுத்து பணியில் ஈடுபட்டு, 25 சிறுகதைகளும், ஒருசில நாவல்களும் எழுதி உள்ளேன். தற்போது சினிமாவில் நடித்து வருகிறேன்.

சிறுகதை, நாவல்களுக்கு உரிய கதை மாந்தர்களை நான் எனக்குள்ளேயும், எனது பகுதி கிராமங்களிலும் இருந்தே தேர்வு செய்கிறேன். அதே போல் வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் தங்களது பகுதியில் நடக்கும் சம்பவங்கள், சம்பிராதயங்களை கருவாகக் கொண்டு, அங்கு செயல்படும் மனிதர்களை கதை மாந்தர்களாக மையப்படுத்தி இலக்கிய படைப்புகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் அது மிக சிறப்பான இலக்கியமாக உருவெடுக்கும். தொடர்பியல் துறை மாணவர்கள் தங்களது படைப்புகளுக்காக அனைத்து விஞ்ஞானங்களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் கதையின் கருவையும், கதையின் நாயகர்களையும் உங்கள் பகுதியில் இருந்து தேர்வு செய்யுங்கள். கலை, இலக்கிய துறையில் கடுமையாக உழைத்தால் நிச்சயம் வெற்றியும், மரியாதையும் கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில், மாணவி ராஜ சினேகா நன்றி கூறினார்.

களை கட்டியது

இதை தொடர்ந்து கலையரங்கில் பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த தொடர்பியல் துறை மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். கரிசல் திரை விழா நேற்று களை கட்டியது. ஆட்டம்– பாட்டம், கொண்டாட்டம் என மாணவ–மாணவிகள் குதூகலத்துடன் காணப்பட்டனர். நடனம், ஆடல்–பாடல், குழு நடனம், சிலம்பம், கரகம், குறும்படம், சிறந்த புகைப்படம் எடுத்தல், இசை உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன.

இன்றும் (சனிக்கிழமை) தொடர்ந்து போட்டிகள் நடைபெறுகின்றன. இன்று மாலை போட்டிகள் முடிவடைந்து வெற்றி பெறும் அணிக்கு சாம்பியன் கோப்பை வழங்கப்படுகிறது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

சுந்தரனார் விருது

முன்னதாக, தமிழ் துறை சார்பில் சுந்தரனார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் எழுத்தாளர் தர்மன் என்பவருக்கு சுந்தரனார் விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.


Next Story