மோடிக்கு கருப்பு கொடி காட்டுவது என் கடமை மதுரையில் வைகோ பேட்டி
மோடிக்கு கருப்பு கொடி காட்டுவது என் கடமை என மதுரையில் வைகோ பேட்டி அளித்தார்.
மதுரை,
மதுரை அழகர்கோவிலில் ம.தி.மு.க. தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் சுருதிரமேஷ், சிவகங்கை மாவட்ட செயலாளர் செவ்வந்தியப்பன், மாநில தொழிற்சங்க நிர்வாகி மகப்பூப்ஜான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினராக ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ கலந்துகொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்து கூறுகையில், "அரசியல் ரீதியாக மோடியை எதிர்ப்பதும், பிரதமர் வரும்போது கருப்பு கொடி காட்டுவதும் தமிழகத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமை. அதே நேரத்தில் நட்பு ரீதியாக பல மத்திய மந்திரிகள், பல ஆண்டுகள் என்னுடன் பழகியவர்கள். அதே போல் தான் சகோதரி மத்தியமந்திரி நிர்மலா சீத்தாராமன். அவர் மனித நேயம் மிக்கவர் என்பதை நான் பல சம்பவங்களில் உணர்ந்துள்ளேன். எங்கள் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் அசாமில் இறந்தபோது நான் தகவல் கொடுத்தேன். அப்போது அவர் சீனாவிற்கு சென்றபோதும் கூட அதற்கு ஏற்பாடு செய்து அந்த வீரர் உடலை உடனடியாக எங்கள் ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்தார். இப்போது கூட கஜா புயல் பற்றி உண்மையாக அவர் ஒருவரே கருத்துக் கூறினார். பட்டாசு தொழிற்சாலைகளை மூடி 8 லட்சம் தொழிலாளர்கள் நடுத்தெருவில் தள்ளப்படும் ஒரு மிகப்பெரிய துன்பத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று உரிமையாளர் சங்க நிர்வாகிகள், நிர்மலா சீத்தாராமனை சந்தித்தபோது அவர் தான், சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் துறை மந்திரியிடம் பிரச்சினையை கொண்டு சென்று அதற்கான எல்லா உதவிகளையும் செய்தார்.
இவ்வாறு வைகோ கூறினார்.