ஈரோட்டில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் மினிபஸ் கண்டக்டர் போக்சோ சட்டத்தில் கைது
ஈரோட்டில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த மினிபஸ் கண்டக்டரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமி 10–ம் வகுப்பு வரை படித்து உள்ளார். அவர் ஈரோட்டில் உள்ள ஒரு காபி தூள் விற்கும் கடையில் வேலை செய்து வந்தார். இதற்காக அவர் தினமும் வீட்டில் இருந்து கடைக்கு மினிபஸ்சில் சென்று வருவது வழக்கம்.
இந்தநிலையில் கடந்த 2–ந் தேதி வேலைக்கு சென்ற அந்த சிறுமியை காணவில்லை. இதுதொடர்பாக ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.
போலீசார் விசாரணையில், சிறுமி தினமும் கடைக்கு சென்று வரும் மினிபஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வந்த கவுந்தப்பாடி அருகே உள்ள கண்ணாடிப்புதூரை சேர்ந்த முருகனின் மகன் மணிகண்டன் (வயது 25) என்பவர் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஈரோட்டில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் நேற்று பிடித்தனர். மேலும், அவரிடம் இருந்து சிறுமியை போலீசார் மீட்டனர். மேலும், சிறுமியை மணிகண்டன் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்து உள்ளது.
இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.